
அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் பாலியல் கல்வி பாடத்திட்டத்திற்குக் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ஹங்வெல்ல, பஹத்கம புனித ஜோசப் தேவாலயத்தில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோருக்கான அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.
ஆறு வயது முதலே மாணவர்களுக்கு பாலியல் கல்வியை அறிமுகப்படுத்தும் புதிய பாடத்திட்டம், சிறுவர் மனதில் தேவையற்ற மற்றும் ‘இயல்புக்கு மாறான’ விடயங்களைப் புகுத்துவதாக அவர் கவலை தெரிவித்தார்.
பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களால் கட்டியெழுப்பப்பட்ட இலங்கையின் கலாசாரக் கட்டமைப்பை இத்தகைய திட்டங்கள் சீர்குலைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளிடமிருந்து நிதி உதவியைப் பெறுவதற்காக, நாட்டின் கலாசார விழுமியங்களை அரசாங்கம் அடகு வைக்கக் கூடாது என அவர் எச்சரித்தார்.
அரசியல் தலைவர்கள் தமக்குரிய எல்லைக்குள் நின்று செயற்பட வேண்டும் என்றும், குடும்பம் மற்றும் மத விழுமியங்களுக்கு முரணான விடயங்களில் தலையிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சிறுவர்களுக்கு மனித உரிமைகள் இருப்பதை ஏற்றுக்கொண்ட போதிலும், அந்த உரிமைகள் அவர்களை பெற்றோருக்கு எதிராகத் திருப்புவதற்கோ அல்லது குடும்பக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது என கர்தினால் வலியுறுத்தினார்.





