சுவிஸ் தேசிய மன்றத் தேர்தல் முறையை மாற்றச் சொல்லி அப்பென்செல் அவுசர்ரோடன் மாநிலம் (Appenzell Ausserrhoden) நாடாளுமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இது தேசிய மன்றத்தில் (Nationalrat) ஒரே ஓர் இடம் மட்டும் உள்ள சிறிய மாநிலங்களுக்கானது.
சுவிஸில் இப்படி ஆறு மாநிலங்கள் உள்ளன. அப்பென்செல் அவுசர்ரோடன், அப்பென்செல் இன்னர்ரோடன் (Appenzell Innerrhoden), கிளாருஸ் (Glarus), நித்வால்டன் (Nidwalden), ஒப்வால்டன் (Obwalden), உரி (Uri). இங்கே இப்போது ஒரே சுற்றுதான். அதிக வாக்கு வாங்கியவர் வெற்றி பெறுவார். பாதிக்கும் குறைவான வாக்கு இருந்தாலும் பரவாயில்லை. 2015-ல் அவுசர்ரோடனில் SVP (சுவிஸ் மக்கள் கட்சி) வேட்பாளர் 10 பேரில் 4 பேரின் வாக்குகளோடு வென்றார்.
புதிய முன்மொழிவின்படி, யாருக்கும் பாதிக்கு மேல் வாக்கு கிடைக்காவிட்டால் இரண்டாவது சுற்று நடக்கும். ஆனால் இது கட்டாயம் இல்லை. எந்த மாநிலம் விரும்புகிறதோ அது மட்டும் மாற்றிக்கொள்ளலாம். சிறிய கட்சிகளும் முதல் சுற்றில் வேட்பாளரை நிறுத்த முடியும், வாக்காளர்களுக்குத் தேர்வு கூடும் என்று கோரிக்கை வைத்தவர்கள் சொல்கிறார்கள். பசுமை லிபரல் கட்சியும் (GLP) பாதிப் பேரின் ஆதரவு கூட இல்லாதவர் தேர்வாவது நல்ல முறை அல்ல என்கிறது.
SVP கட்சி இதை ஏற்கவில்லை. செலவும் வேலையும் கூடும், முடிவு மட்டும் மாறாது என்கிறது. சென் காலன் பல்கலைக்கழக (St. Gallen) அரசியல் ஆய்வாளர் ஒருவரும், இரண்டாவது சுற்றால் சிறிய கட்சிகளுக்குப் பெரிய பலன் இல்லை என்கிறார். இந்த மாற்றத்தால் SVP கட்சிக்கே அதிகப் பாதிப்பு வரும் என்றும் சொல்கிறார். ஆனால் ஆறு மாநிலங்களுக்கு மட்டும், அதுவும் விருப்பப்பட்டால் மட்டும் என்பதால் இந்தக் கோரிக்கைக்குச் சிறிது வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்.
இதைப் பற்றி நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் குழுக்கள் முடிவு செய்யும்.
மூலம்: SRF
புகைப்படம்: Thiago de Andrade / Unsplash





