சூரிச் மாநிலத்தில் (Zürich) உள்ள டீட்டிகோன் (Dietikon) நகரில் ஒரு கார் பஸ் நிறுத்தத்தில் நின்றவர்கள் மீது மோதியது. மாலை 5 மணிக்கு இந்த விபத்து நடந்தது என்று சூரிச் மாநிலப் பொலிஸ் (Kantonspolizei) தெரிவித்துள்ளது.
பஸ் நிறுத்தத்தில் சிலர் பஸ்ஸுக்காகக் காத்திருந்தனர். அவர்களில் 47 வயதுப் பெண்ணை கார் இடித்துத் தூக்கி வீசியது. அவருக்கு லேசானது முதல் நடுத்தரம் வரையிலான காயங்கள் ஏற்பட்டன. மீட்புப் பணியாளர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அதற்குப் பிறகும் கார் நிற்கவில்லை. கம்பி வேலியை உடைத்துக்கொண்டு, குழந்தைகள் விளையாடும் இடத்தின் குறுக்கே ஓடியது. அப்போது காரின் எக்ஸாஸ்ட் குழாய் கழன்று விழுந்தது. காரைத் திருப்ப முயன்றபோது, அது நகர முடியாமல் நின்றுவிட்டது.
காரில் இருந்த இருவரும் நம்பர் பிளேட்டுகளைக் கழற்றி எடுத்துக்கொண்டு நடந்தே தப்பி ஓடினர். ஒரு பெண்ணும் ஒரு ஆணும். இருவரும் சுவிஸ் நாட்டவர்கள். அவர்களைப் பொலிஸ் தேடி வருகிறது. விபத்தில் அந்தப் பெண்ணின் தலையில் காயம் பட்டிருக்கலாம் என்று பொலிஸ் கூறுகிறது.
விபத்து எப்படி நடந்தது என்பதை, பொலிஸும் லிம்மாட்டல்-ஆல்பிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகமும் (Staatsanwaltschaft Limmattal-Albis) சேர்ந்து விசாரித்து வருகின்றன.
மூலம்: SRF
புகைப்படம்: Tom Barrett / Unsplash





