சுவிஸ்

சுவிசில் பெண்களைக் கொல்ல முயன்ற 169 வழக்குகள்: அதிர வைக்கும் ஆய்வு

சுவிசில் பெண்களைக் கொல்ல முயன்ற 169 வழக்குகளை சுவிஸ் தொலைக்காட்சி SRF-இன் புலனாய்வுக் குழு ஆய்வு செய்துள்ளது. 2020-க்குப் பிறகு வந்த நீதிமன்றத் தீர்ப்புகளைப் பார்த்து இதைக் கண்டுபிடித்துள்ளனர்.

பெண் என்பதற்காகவே ஒரு பெண்ணைக் கொல்வதை “Femizid” என்கிறார்கள். கொல்ல முயன்றாலும், வேண்டுமென்றே உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தினாலும் இந்த ஆய்வில் சேர்த்துள்ளனர். சுவிசில் இந்த வன்முறை எவ்வளவு என்பது இப்படி முதல்முறையாகத் தெரியவந்துள்ளது.

10 வழக்குகளில் 4-இல் ஆண்கள் பெண்ணின் கழுத்தை நெரித்தனர். அடுத்தபடியாக கத்தி அல்லது கூர்மையான பொருளைப் பயன்படுத்தினர். சில வழக்குகளில் துப்பாக்கியால் சுட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்களில் 4-இல் 3 பேர், தாக்கியவரின் மனைவி, காதலி அல்லது முன்னாள் மனைவி, முன்னாள் காதலி. பெரும்பாலான தாக்குதல்கள் வீட்டுக்குள்ளேயே நடந்தன. குடும்பத்துக்குள் நடந்த வழக்குகளில் பெரும்பாலும் முன்பே அடி, உதை இருந்தது. பொறாமையும், பெண்ணைக் கட்டுப்படுத்துவதும் அடிக்கடி காணப்பட்டன. ஒரு கணவன் மனைவியின் போன், வீட்டுச் சாவி, வங்கி கார்டு எல்லாவற்றையும் பறித்து, வேலைக்குப் போகவும் விடவில்லை.

பல பெண்கள் தாக்குதலுக்கு முன்பே உதவி தேடியிருக்கிறார்கள். சிலர் நெருக்கமானவர்களிடம் சொன்னார்கள். சிலர் போலீசில் புகார் கொடுத்தார்கள்.

தாக்கியவர்களில் 166 பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டவர்கள். ஆனால் தேசியம் மட்டுமே இதற்குக் காரணம் இல்லை என்கிறார் சட்டப் பேராசிரியர் நோரா மார்க்வால்டர் (Nora Markwalder). குடும்பப் பின்னணி, கல்வி, பெண்களைப் பற்றிய பார்வை போன்றவற்றையும் ஆராய வேண்டும் என்கிறார்.


மூலம்: SRF
புகைப்படம்: Martino Pietropoli / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button