சுவிஸில் தயாரான துல்லியமான துப்பாக்கி குண்டுகள் ரஷ்யாவுக்குப் போய்ச் சேர்ந்துள்ளன. NZZ am Sonntag என்ற செய்தித்தாள் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
இந்த குண்டுகளைத் தயாரித்தது பெர்ன் மாநிலத்தில் (Bern) உள்ள துன் (Thun) நகரின் SwissP Defence நிறுவனம். 2022 முதல் இது இத்தாலியின் பெரெட்டா (Beretta) குழுமத்துக்குச் சொந்தம். ரஷ்யா மீது 2014 முதல் தடைகள் இருக்கின்றன. ஆனாலும் சுமார் 110,000 குண்டுகள் ஸ்லோவேனியா, கிர்கிஸ்தான் வழியாக ரஷ்யா போயின.
ரஷ்ய நிறுவனங்கள் இவற்றைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு என்று பதிவு செய்தன. ஆனால் SwissP Defence தன் இணையதளத்தில் இதே குண்டுகளை “துப்பாக்கி சுடும் வீரரின் தேர்வு” என்று விளம்பரம் செய்கிறது.
முதலில் சுவிஸ் அரசு சட்டப்படியே ஏற்றுமதிக்கு அனுமதி கொடுத்தது. ஸ்லோவேனியாவில் வாங்கியவர் ஒரு பிரபல ஆயுத வியாபாரி. குண்டுகளை வேறு நாட்டுக்கு மறுபடி விற்கக்கூடாது என்ற உறுதியை அவர் மீறியதாகத் தெரிகிறது. நிறுவனம், “சட்டத்துக்கு உட்பட்டுதான் விற்கிறோம்” என்கிறது. சுவிஸ் பொருளாதார விவகாரங்களுக்கான அரசு செயலகம் (SECO), தன்னிடம் உள்ள தகவல்களை ஆய்வு செய்து வருவதாகச் சொல்கிறது. இது போர்ப் பொருள்தான் என்பதில் சந்தேகமே இல்லை என்றும் உறுதிப்படுத்தியது.
இரண்டு வாரத்தில் சுவிஸில் ஆயுத ஏற்றுமதிச் சட்டம் பற்றிய வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. சுவிஸ் மத்திய அரசு (Bundesrat) இந்தச் சட்டத்தை தளர்த்த விரும்புகிறது. மாற்றம் வந்தால், ஆயுதம் வாங்கும் நாடுகள் அதை பெர்னின் அனுமதி இல்லாமல் வேறு நாட்டுக்குக் கொடுக்கமாட்டோம் என்று எப்போதும் உறுதி கொடுக்க வேண்டியதில்லை. இப்போதைய விதிகளிலேயே ஓட்டைகள் இருப்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.
மூலம்: RSI
புகைப்படம்: Jay Rembert / Unsplash





