சுவிஸில் வேலை செய்யும் இத்தாலிய எல்லைத் தொழிலாளர்களுக்கான “சுகாதார வரி”யின் விதிகளை இத்தாலி அரசு மாற்ற நினைக்கிறது. 2027 பட்ஜெட் வரைவில் இது திங்கட்கிழமை வெளியானது.
இந்த வரி 2024 முதல் இருக்கிறது. இத்தாலிய எல்லைப் பகுதிகளில் வசித்து, சுவிஸில் மட்டும் வரி கட்டும் பழைய எல்லைத் தொழிலாளர்களுக்கு இது பொருந்தும். இத்தாலியின் அரசு மருத்துவச் சேவைக்கு பணம் திரட்டுவதே இதன் நோக்கம். இதுவரை சுவிஸ் சம்பளத்துக்கு ஏற்ப வரி கணக்கிடப்பட்டது. ஆனால் இத்தாலிய பிராந்தியங்கள் இதை இன்னும் அமல்படுத்தவில்லை.
புதிய திட்டத்தில் சம்பளத்துக்கும் வரிக்கும் தொடர்பு இல்லை. மாதம் 30 முதல் 150 யூரோ வரை ஒரு நிலையான தொகை. அதை ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பிராந்தியம் முடிவு செய்யும்.
தீசினோ மாநிலத்தின் (Ticino) நிதி அமைச்சர் கிறிஸ்டியன் விட்டா (Christian Vitta) இதை வரவேற்றுள்ளார். “நாங்கள் சொன்ன குறைகளில் உண்மை இருந்தது என்பதை இந்த மாற்றம் காட்டுகிறது” என்கிறார். சுவிஸ்–இத்தாலி ஒப்பந்தம் கையெழுத்தாகி கொஞ்ச நாளிலேயே புதிய வரி வருவது தவறு என்பது அவர் கருத்து. வரிப் பணம் முழுவதும் இத்தாலிக்கே போகக்கூடாது, ஒரு பகுதி தீசினோவிலும் இருக்க வேண்டும் என்கிறார்.
ஜூனில் தீசினோ, லொம்பார்டியா (Lombardia) பிராந்தியத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டிய வரிப் பணத்தில் ஒரு பகுதியை நிறுத்தி வைத்தது. இப்போது 50 மில்லியனுக்கு மேல் முடங்கிக் கிடக்கிறது. சுவிஸ் மத்திய அரசு, இத்தாலி, லொம்பார்டியா, தீசினோ சேர்ந்த பேச்சுக்குழுவின் முடிவு வந்த பிறகே அதை விடுவிப்பார்கள்.
தொழிலாளர் சங்கம் இதை ஏற்கவில்லை. “பெயர்தான் மாறியிருக்கிறது, வரி அப்படியே இருக்கிறது. இரட்டை வரி தான்” என்கிறார் சங்கத்தின் கிறிஸ்டியன் பிசா (Cristian Bisa). வரியாக வாங்குவதற்கு தொழிலாளிக்கு என்ன சேவை கிடைக்கும் என்று யாரும் சொல்லவில்லை என்றும் அவர் குறை கூறுகிறார். இது இன்னும் வரைவு மட்டுமே. நாடாளுமன்றம் ஒப்புக்கொண்டால் வழக்குத் தொடர சங்கங்கள் தயாராக உள்ளன.
மூலம்: RSI
புகைப்படம்: Thomas De Giorgio / Unsplash





