ஜெனீவா (Genève) மாநிலத்தில் மருத்துவமனைகளிலும் பொதுப் போக்குவரத்திலும் உள்ள கோடைகால வேலைகள் கிட்டத்தட்ட எல்லாமே ஊழியர்களின் பிள்ளைகளுக்குப் போயிருக்கின்றன. இது அரசியலில் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனைகள் (HUG), ஜெனீவா பொதுப் போக்குவரத்து நிறுவனம் (TPG) ஆகிய இரண்டிலும் இந்த ஆண்டு 407 கோடைகால வேலைகள் இருந்தன. அவற்றில் 406 வேலைகள் அங்கே வேலை செய்பவர்களின் குடும்பத்தினருக்குக் கிடைத்தன. உள்ளூர் தொலைக்காட்சி லெமான் ப்ளூ (Léman Bleu) இதை வெளியிட்டது.
இன்னொரு விஷயமும் பேசப்படுகிறது. இந்த இளைஞர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் சுவிசுக்கு வெளியே வெளிநாட்டில் வசிப்பவர்கள். அதனால் ஜெனீவாவில் வசிக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.
மாநில நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் சவ்டான் (Marc Saudan) இதை “அதிர்ச்சியான பிரச்சினை” என்கிறார். உடனே தீர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார். வேலை கொடுக்கும் விதிகளை மாற்றச் சொல்லி அவர் நாடாளுமன்றத்தில் மனுவும் கொடுத்துள்ளார்.
ஜெனீவாவின் உள்ளூர் கட்சியான MCG இதை “வெட்கக்கேடு” என்கிறது. எல்லை தாண்டி வேலைக்கு வருபவர்களின் பிள்ளைகளுக்கு இந்த வேலைகள் போவதை ஏற்கவே முடியாது என்று அந்தக் கட்சியின் உறுப்பினர் அனா ரோஷ் (Ana Roch) கூறினார்.
மூலம்: Le Matin
புகைப்படம்: Ricardo Gomez Angel / Unsplash





