தமிழீழம்

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் நில ஆக்கிரமிப்புகளைக் கண்டித்து நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி நவம்பர் 2ஆம் திகதி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்.

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் நில ஆக்கிரமிப்புகளைக் கண்டித்து நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி நவம்பர் 2ஆம் திகதி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்.

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் நீண்டகாலமாகத் தொடர்ந்து இடம்பெற்று வரும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகள், மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்படுதல், பண்ணையாளர்கள் மீதான வன்முறைகள் மற்றும் கால்நடைகள் கொல்லப்படுதல் போன்ற சம்பவங்களைக் கண்டித்தும், நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் எதிர்வரும் 2026 நவம்பர் 2ஆம் திகதி, திங்கட்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமும் கதவடைப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வர்த்தகர்கள் சங்கம் மற்றும் பல்வேறு தரப்பினருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்று மட்டு.மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.இந்த சந்திப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை என்பது தலைமுறை தலைமுறையாகக் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களின் பொருளாதார அடித்தளமாகும். எனினும், அண்மைக்காலமாக இங்குள்ள மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால், கால்நடைகள் விவசாயப் பயிர்ச்செய்கை நிலங்களுக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் இடையே தேவையற்ற முரண்பாடுகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், இரு தரப்பினரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும், பண்ணையாளர்கள் கடத்தப்பட்டுத் தாக்கப்படுவதுடன், அவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன. ஜனாதிபதி முதல் மாவட்ட அரச அதிகாரிகள் வரை பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகள் கூட இதுவரை முறைப்படி நடைமுறைப்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் மற்றும் கிழக்கு மாகாண நில வளங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளைச் சட்டப்படி உடனடியாக அமுல்படுத்துதல், மேய்ச்சல் நிலங்களின் உரிய பயன்பாட்டை உறுதிப்படுத்தி வர்த்தமானி பிரகடனத்தை வெளியிடுதல் மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் தொடர்பாகச் சட்டரீதியான விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தல் என்பன அவசியமாகும்.

அத்துடன், கால்நடைகள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்பில் சுதந்திரமான விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டித்தல், பண்ணையாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பங்கள் மீதான வன்முறைகளைத் தடுத்து பாதுகாப்பை உறுதி செய்தல், விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் நிரந்தர திட்டத்தை நடைமுறைப்படுத்தல், நில வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுதல் ஆகிய கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இது வெறுமனே பண்ணையாளர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல என்றும்; நில உரிமை, உணவுப் பாதுகாப்பு, மனித உரிமைகள், சமூக நல்லிணக்கம் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் பாதுகாப்பிற்கான போராட்டம் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இன, மத, மொழி மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் நீதிக்காக ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்திற்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியம், அறம் அமைப்பு, மட்டக்களப்பு மாவட்ட கால்நடை கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், மயிலத்தமடு மாதவனை கால்நடை வளர்ப்போர் கமநல அமைப்பு, கமக்கார அமைப்புக்களின் மாவட்ட அதிகார சபை, கிழக்கு மாகாண மீனவத் தொழிற்சங்கம், கிழக்கு மாகாண இந்துக் குருமார்கள் ஒன்றியம், மண்முனை மேற்கு விவசாய சம்மேளனம், மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியம், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் மற்றும் படைப்பாற்றலுக்கான வானவில் தூண்கள் வலையமைப்பு ஆகிய பல்வேறு அமைப்புகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

எனவே, நவம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள இப்போராட்டத்தில் சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், மதத் தலைவர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button