இலங்கைதமிழீழம்

ஆனந்தபுரத்தில் விட்டுச்செல்லப்பட்ட 300 க்கும் மேற்பட்ட போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர்; ITJP யின் புதிய அறிக்கையில் தகவல்

இலங்கை இராணுவம் 2009 ஏப்ரல் மாதம் ஆனந்தபுரத்தைக் கைப்பற்றியபோது கடுமையாகக் காயமடைந்த நிலையில் ஒரே கட்டடத்துக்குள் விட்டுச்செல்லப்பட்ட 300 க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகள் படுகொலை செய்யப்பட்டதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இறுதிக்கட்டப் போரில் தப்பிப்பிழைத்தவர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டு, ‘ஆனந்தபுர மோதல்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனந்தபுரத்தின் முற்றுகையிடப்பட்ட பகுதியின் கிழக்குப் புறமாக இருந்த கணினி மையப்பகுதியில் போரின் இறுதி நாட்களில் காயமடைந்த நூற்றுக்கணக்கான போராளிகள் கூடியதாகவும், 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதியன்று காயமடைந்தவர்கள் அங்கு விட்டுச்செல்லப்பட்டதாகவும், அதன்பின்னர் ளஅவர்கள் யாரையும் காணவில்லை என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அங்கிருந்து தப்பிப்பிழைத்த ஒருவர், ‘நான் வெளியேறியபோது காயமடைந்தவர்கள் உயிருடன் இருந்தனர். அவர்களிடம் துப்பாக்கிகளோ, வெடிபொருட்களோ அல்லது சயனைட்டோ இருக்கவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அங்கு விட்டுச்செல்லப்பட்ட 30 க்கும் மேற்பட்டோருடன் பயிற்சி பெற்று, அவர்களது குடும்பத்தினரையும் நன்கறிந்த மற்றொருவர், ‘அவர்கள் மீண்டும் திரும்பி வரவில்லை. அவர்கள் அனைவரையும் படுகொலை செய்துவிடுவார்கள் என நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. அங்கு விட்டுச்செல்லப்பட்ட காயமடைந்தவர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டதாகப் பின்னர் அறிந்துகொண்டோம்’ எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவ்வறிக்கையில் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, ‘ஆனந்தபுரம் படுகொலைகள் குறித்து சாட்சியமளிப்பதற்கு யாரும் தப்பவில்லை என்றே நாம் பல வருடங்களாக நம்பிக்கொண்டிருந்தோம். இருப்பினும் அங்கிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் சிலர் இப்போது அவர்களது மௌனத்தைக் கலைத்துள்ளனர். இராணுவ வெற்றி என்பது காயமடைந்தவர்களைக் கொல்வதற்கான உரிமையை வழங்கிவிடாது. கடந்த 17 வருடங்களாகத் தொடரும் தண்டனைகள் ஏதுமற்ற நிலைமை, குற்றவியல் பொறுப்பை அழித்துவிடாது. இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த காலங்களில் நிகழ்ந்தவற்றை இலங்கை வெளிப்படுத்துவதுடன், மீறல்களுடன் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button