தமிழீழம்

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் பரபரப்பு: எம்பி அர்ஜுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹாரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக வழக்கு!

மட்டக்களப்பு:

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியமை மற்றும் சமூக மோதலைத் தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டமைக்காக, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ஜுனா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹாரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட ‘ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின்’ (Online Safety Act) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கின் பின்னணி:

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனை இலக்கு வைத்து, ஹிஜாப் விவகாரம் தொடர்பாகவும், அவருடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக அவதூறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதனையடுத்தே, தனிநபர்களுக்கு மாத்திரமன்றி, இத்தகைய உள்ளடக்கங்களைப் பரப்பிய யூடியூப் (YouTube) மற்றும் ஃபேஸ்புக் (Facebook) ஆகிய 2 சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு எதிராகவும் வைத்தியர் சுகுணன் தரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துகளைத் தொடர்ந்து, குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராகத் தடையாணை அல்லது நிபந்தனையுடன்கூடிய கட்டளைகளைப் பிறப்பிப்பது தொடர்பில் பரிசீலிப்பதற்காக, வழக்கின் மீதான கட்டளையை வரும் செப்டம்பர் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கில் வைத்தியர் சுகுணன் சார்பில் சட்டத்தரணிகளான டயஸ் மற்றும் க. கிஸோபனா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button