
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கை புலம்பெயர் தொழிலாளி சிவராசா அனோஜனை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வருமாறு, அவரது தாயார் இலங்கை அரசாங்கத்திடமும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சவுதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றம், நபிகள் நாயகம் முஹம்மது அவர்களை அவமதிக்கும் வகையிலானதாக கருதப்பட்ட Facebook பதிவொன்றின் காரணமாக அனோஜனுக்கு 5 வருட தண்டனை வழங்கப்பட்டது. குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டது. இலங்கை அரசு 18 லட்சம் ரூபாயை அனோஜனின் குடும்பத்தினரிடம் பெற்று வழக்கை ஆரம்பித்தனர். ஆனால் குறித்த மேன்முறையீட்டின் தீர்ப்பில் மரண தண்டனை விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவருக்கு உதவுவதற்காக இலங்கை அரசாங்கம் சட்டரீதியான மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் ஆலோசித்து வருவதுடன், அதேவேளை சவுதி அரசாங்கத்திடம் கருணை அல்லது தண்டனைக் குறைப்புகோருவதற்கான இராஜதந்திர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, அனோஜனின் குடும்பத்தினருடன் மேல்முறையீடு செய்வது தொடர்பில் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.
அத்துடன், அரச குடும்பத்தின் மன்னிப்பு அல்லது மரண தண்டனையை வேறு தண்டனையாகக் குறைப்பது உள்ளிட்ட இராஜதந்திர வாய்ப்புகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவளை குறித்த தண்டனையை ரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்





