
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த பாதுகாப்பற்ற நிலையிலுள்ள புகையிரதக் கடவைகளை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு வலியுறுத்தும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும், பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதிசெய்யவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “நிர்வாகத்தின் அலட்சியமே… பலியான உயிர்களுக்குப் பதிலென்ன?”, “மக்களின் உயிருக்கு மதிப்பளி! புகையிரதக் கடவையை புனரமை!”, “வேண்டாம் வேண்டாம்! – மரணக் கடவைகள் வேண்டாம்!” போன்ற பதாதைகளைத் தாங்கியவாறும், அண்மையில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையினால் மரணமடைந்த பாடசாலை மாணவியின் புகைப்படங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளைப் புனரமைக்கவும், விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், கரைச்சி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர் சங்கத்தின் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையினால் அண்மையில் மரணமடைந்த பாடசாலை மாணவியின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





