வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் 25.08.2026இன்று பல இடங்களிலும் நினைவுகூரப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் பண்டாரவன்னியன் ஒரே வாள்வீச்சில் அறுபது வெள்ளையர்களை வீழ்த்தியதாகக் கூறப்படும் முல்லைத்தீவு – முள்ளியவளை, கற்பூரப் புல்வெளியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பண்டாரவன்னியனுக்கு அஞ்சலிசெலுத்தினார்.
இந்நிலையில் கற்பூரப் புல்வெளியில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சமூக செயற்பாட்டாளர் மணிவண்ணன் நிறோஜன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது வவுனியா, மாவட்டசெயலகத்தின் முன் உள்ள பண்டாரவன்னியன் சதுக்கத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இதன்போது பண்டாரவன்னியனின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மாவீரன் பண்டாரவன்னியன் தொடர்பான நினைவு பேருரையினை தமிழ்மணி அகளங்கனால் ஆற்றப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர, தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பல.பாலேந்திரன், அரச உயர் அதிகாரிகள், உள்ளூராட்சி சபையின் உபதவிசாளர்கள், உறுப்பினர்கள், பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
URL Copied
RanganAugust 25, 2026சமீபத்திய புதுப்பிப்பு August 25, 2026