இலங்கைபுதிய செய்திகள்

தேவாலயங்கள் வெறிச்சோடியிருக்க, கால்பந்து மைதானங்களில் முட்டாள்தனமாக கூடும் மக்கள்” – கர்தினால் மால்கம் ரஞ்சித் கவலை

நவீன சமூகத்தில் மதநம்பிக்கையும் ஆன்மீக வாழ்க்கையும் படிப்படியாக குறைந்து வருவது குறித்து பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் கவலை வெளியிட்டுள்ளார். பொழுதுபோக்கிற்காக மக்கள் வழிபாட்டுத் தலங்களை புறக்கணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருப்பலியில் உரையாற்றிய கர்தினால், பல முன்னேறிய நாடுகளில் தேவாலயங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், பல தேவாலயங்கள் மூடப்பட்டு வருவதாகக் கூறினார்.

“மக்கள் இனி தேவாலயங்களுக்கு வருவதில்லை. அதற்கு பதிலாக, முட்டாள்தனமாக கால்பந்து மைதானங்களிலும் பிற பொழுதுபோக்கு நிகழ்வுகளிலும் பெருமளவில் கூடுகின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய பேராலயங்கள் பல தற்போது பெரும்பாலும் வெறிச்சோடியுள்ளன என்றும், இது கடவுள் மீதான நம்பிக்கை பலவீனமடைந்ததற்கான அறிகுறி என்றும் கர்தினால் குறிப்பிட்டார்.

1789ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியை நினைவுகூர்ந்த அவர், அதன்பின்னர் மனித சமூகம் கடவுள் இல்லாத வாழ்க்கையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இன்று பலரின் வாழ்க்கையில் மதத்திற்கு மிகக் குறைந்த இடமே வழங்கப்படுவதாகவும் கூறினார்.

மேலும், சமூகங்கள் தங்களை அதிகம் முன்னேறியவை என்று கூறிக்கொள்ளும் நிலையில், உண்மையான மனித விழுமியங்களிலிருந்து விலகிச் செல்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உடல் தேவைகள் மற்றும் தற்காலிக இன்பங்களிலேயே மக்கள் அதிக கவனம் செலுத்தி, ஆன்மீக வாழ்க்கையை புறக்கணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் போக்கு மனிதனை அவனே உருவாக்கிய உலகில் தனிமைப்படுத்தி வருவதாக எச்சரித்த கர்தினால் மால்கம் ரஞ்சித், மனித கண்ணியத்தை நிலைநிறுத்தும் இறைநம்பிக்கையையும் உயர்ந்த மனித விழுமியங்களையும் மீண்டும் கண்டறியுமாறு மக்களை வலியுறுத்தினார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button