
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியப் பெண் ஒருவர், நீதிமன்ற அனுமதியுடன் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனது இரு மகன்களையும், அமெரிக்கத் தந்தையிடம் மீண்டும் ஒப்படைக்கத் தவறியதாகக் கூறப்படும் சம்பவம் சர்வதேச குழந்தைகள் காவல் (Child Custody) வழக்காக மாறியுள்ளது.
தி டெலிகிராப் வெளியிட்ட தகவலின்படி, 34 வயதான நிஷிகா சமரதுங்க, தனது ஐந்து வயது மகன் பிளெய்ன் மற்றும் மூன்று வயது மகன் நாதனியல் ஆகியோருடன் கடந்த மார்ச் 29ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
கொலராடோ நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகளை அவர்களின் தந்தையான பென் பயர் வசம் மீண்டும் ஒப்படைக்க வேண்டியிருந்த நிலையில், அவர் அவ்வாறு செய்யவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குழந்தைகளை மீட்கும் நோக்கில் லண்டன் உயர்நீதிமன்றத்தில் பென் பயர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இரு குழந்தைகளும் ஆட்டிசம் (Autism) பாதிப்புடையவர்கள் என்பதால், அவர்கள் தற்போது வழக்கமான கல்வி மற்றும் மருத்துவ பராமரிப்பைப் பெறாமல் இருக்கக்கூடும் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
குழந்தைகளை கண்டுபிடிக்க உதவுவதற்காக, இந்த வழக்கின் விவரங்களை பொதுமக்கள் மத்தியில் வெளியிட லண்டன் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், நிஷிகா சமரதுங்க மற்றும் குழந்தைகள் இருக்கும் இடத்தைக் கண்டறிய பிரித்தானியாவில் உள்ள பல அமைப்புகளுக்கும் நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, குழந்தைகளை லண்டனுக்கு நிரந்தரமாக மாற்றுவதற்கான நிஷிகா சமரதுங்கவின் கோரிக்கையை நிராகரித்த கொலராடோ நீதிமன்றம், குழந்தைகளின் முதன்மை காவல் உரிமையை தந்தை பென் பயருக்கு வழங்கியிருந்தது.
பின்னர், குழந்தைகள் உடனடி ஆபத்தில் இருக்கக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில், அமெரிக்க நீதிபதி ஒருவர் சட்ட அமலாக்க அதிகாரிகள் குழந்தைகளை பாதுகாப்பு காவலில் எடுக்கவும் அனுமதி வழங்கியிருந்தார்.
இந்த வழக்கு தற்போது பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் நீதிமன்றங்களிலும் விசாரணையில் உள்ளது.





