
சர்ச்சைக்குரிய சமூக ஊடக பிரபலமும் முன்னாள் கிக் பாக்ஸிங் உலக சாம்பியனுமான ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் டேட் ஆகியோர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் மியாமியில் அமெரிக்க மார்ஷல் சேவையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் அவர்கள் இருவருக்கும் எதிராக புதிய குற்றச்சாட்டுகளை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் ஆண்மை, பெண்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகளால் உலகளவில் பிரபலமான ஆண்ட்ரூ டேட், தனது சகோதரர் டிரிஸ்டன் டேட்டுடன் இணைந்து சமூக ஊடகங்களில் பெரும் பின்தொடர்பாளர்களைக் கொண்டவர்.
இங்கிலாந்து அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, இருவரையும் பிரித்தானியாவுக்கு ஒப்படைக்க (Extradition) நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பிரித்தானியாவின் Crown Prosecution Service (CPS) தெரிவித்ததாவது, ஆண்ட்ரூ டேட் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் சுரண்டலுக்கான மனிதக் கடத்தல், தாக்குதல், சிறார்களின் ஆபாசப் படங்கள் தொடர்பான குற்றங்கள் மற்றும் தீவிர ஆபாசப் பொருட்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
டிரிஸ்டன் டேட் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் வன்கொடுமை மற்றும் மனிதக் கடத்தல் தொடர்பான மேலதிக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகள் 2010 முதல் 2017 காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
அமெரிக்க மற்றும் பிரித்தானிய இரட்டைக் குடியுரிமை கொண்ட டேட் சகோதரர்கள், தங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளனர்.
அவர்களின் சட்டத்தரணி, இந்த புதிய வழக்கு அவர்களின் சட்டப் போராட்டங்களை பலவீனப்படுத்தும் முயற்சி எனக் கூறியுள்ளதுடன், குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்த்து போராடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் ருமேனியாவில் மனிதக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக டேட் சகோதரர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டிருந்தனர். அந்தக் குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மறுத்துள்ளனர்.
இந்நிலையில், ஒப்படைப்பு (Extradition) நடைமுறைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், அவர்கள் விரைவில் மியாமி கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.





