
லிதுவேனியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாக பொய்யான வாக்குறுதி அளித்து பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து இலங்கையில் உள்ள லிதுவேனியா குடியரசின் தூதரக அலுவலகம்,பொதுமக்களை எச்சரித்துள்ளது.
வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுலா (Tourist) விசாவில் லிதுவேனியாவிற்கு சென்று வேலை பெற முடியும் எனக் கூறி சில நபர்களும் முகவர்களும் இலங்கையர்களை தவறாக வழிநடத்துவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இத்தகைய வாக்குறுதிகள் சட்டவிரோதமானவை என வலியுறுத்திய தூதரகம், வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தருவதாகக் கூறும் எந்த நபருக்கும் அல்லது அவர்களது தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கும் பணம் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் இலங்கையர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (Sri Lanka Bureau of Foreign Employment) பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாக மட்டுமே சட்டபூர்வ நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், பணம் செலுத்துவதற்கு முன் அனைத்து தகவல்களையும் அதிகாரப்பூர்வ வழிகளின் மூலம் சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தூதரகத்தின் தூதரக, இராஜதந்திர மற்றும் அரசியல் விவகாரங்கள், மக்கள் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு பணிப்பாளர் காஞ்சனா கொடித்துவக்கு,
“வேலைவாய்ப்பு என்ற பெயரில் நடைபெறும் மோசடிகள் குறித்த தகவல்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்களின் பணம், பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.
மேலும், இலங்கையில் உள்ள லிதுவேனியா தூதரக அலுவலகம், புதுடெல்லியில் உள்ள லிதுவேனியா தூதரகத்துடன்நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாகவும், உயர்கல்வி, சட்டபூர்வ வேலைவாய்ப்பு மற்றும் லிதுவேனியாவில் உள்ள பிற சட்டபூர்வ வாய்ப்புகள் குறித்து இலங்கையர்களுக்கு வழிகாட்ட உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, பொதுமக்கள் சரியான தகவல்களைப் பெற லிதுவேனியா தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களை மட்டுமே பின்பற்றவும், சந்தேகங்கள் இருப்பின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் மூலமாக மட்டுமே தொடர்புகொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





