உலகம்

மியான்மர் கடலில் இரு படகுகள் கவிழ்ந்த சோகம்: 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அச்சம்

மியான்மர் கடலில் ஜூன் மாத இறுதியில் இருந்து இரண்டு பெரிய படகுகள் கவிழ்ந்ததாக வெளியாகியுள்ள தகவல்களை அடுத்து, 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) கவலை வெளியிட்டுள்ளது.

ஐ.நா.வின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) மற்றும் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) இணைந்து வெளியிட்ட அறிக்கையில், சமீப நாட்களில் மியான்மர் கடற்கரையில் 500-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற தகவல்கள் மிகவும் கவலைக்குரியவை என தெரிவித்துள்ளன.

ஆரம்பக் கட்ட தகவல்களின்படி, இந்த இரண்டு படகுகளும் ஜூன் இறுதியில் மியான்மரின் ரகைன் (Rakhine)மாநிலத்திலிருந்து புறப்பட்டவை. அவற்றில் பெரும்பாலானோர் மியான்மரின் முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்யா அகதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர், வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் (Cox’s Bazar) அகதி முகாம்களிலிருந்தும் இந்தப் பயணத்தில் இணைந்திருந்ததாக கூறப்படுகிறது. அங்கு 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா அகதிகள் மிகவும் மோசமான சூழ்நிலையில் வசித்து வருகின்றனர்.

UNHCR தகவலின்படி, கடந்த ஆண்டு மட்டும் வடக்கு இந்தியப் பெருங்கடலில் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்ட 6,500-க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகளில், சுமார் 900 பேர் உயிரிழந்தோ அல்லது காணாமல் போனோராக பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டு சம்பவங்களில், சுமார் 250 பேருடன் சென்ற முதல் படகு புறப்பட்ட சில நேரத்திலேயே தொடர்பை இழந்துள்ளது. சுமார் 280 பேருடன் சென்ற இரண்டாவது படகு, ஜூலை 8ஆம் தேதி மியான்மரின் அயேயார்வாடி (Ayeyarwady) கடற்கரையருகே மூழ்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவங்களும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாக IOM மற்றும் UNHCR தெரிவித்துள்ளன.

மேலும், இந்தப் பயணங்கள் வழக்கமான கடல் பயண காலத்திற்கு வெளியே நடைபெற்றதாகவும், சமீபத்திய கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடல் நிலை மிகவும் மோசமடைந்திருந்ததாகவும் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தத் தகவல்கள் உறுதியாகும் பட்சத்தில், இந்த ஆண்டு அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் ஏற்கனவே உயிரிழந்த அல்லது காணாமல் போனதாகக் கூறப்படும் சுமார் 300 பேருடன், இந்த எண்ணிக்கையும் சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் நீடித்து வரும் மோதல்கள், மனிதாபிமான நெருக்கடி, வங்கதேச அகதி முகாம்களில் குறைந்த உதவிகள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் ஆகியவை, ரோஹிங்யா மக்களை உயிரைப் பணயம் வைத்து கடல் வழியாக தப்பிச் செல்லத் தூண்டுகின்றன என்று ஐ.நா. அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மேலும், மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல்கள், பாதுகாப்பு தேடி அலைபவர்களின் துயரத்தை தொடர்ந்து சுரண்டி வருவதாகவும் எச்சரித்துள்ளன.

இதனையடுத்து, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும், மனிதக் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் IOM மற்றும் UNHCR உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

அதேவேளை, பல ஆண்டுகளாக ரோஹிங்யா அகதிகளுக்கு தங்குமிடம் வழங்கி வரும் வங்கதேசத்தின் மனிதாபிமான பங்களிப்பை பாராட்டியுள்ள ஐ.நா., அகதிகளுக்கும் அவர்களை தங்கவைத்துள்ள சமூகங்களுக்கும் சர்வதேச அளவில் தொடர்ந்து ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button