அரசியல்இலங்கைதமிழ்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய கூட்டணி உதயம்

மூன்று முக்கிய அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒருமித்து தீர்வு காண இணக்கம்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் புதிய கூட்டணியாக ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன.

இதற்கமைய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தமிழ் அரசு கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கொழும்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த முக்கிய சந்திப்பைத் தொடர்ந்து இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இக்கூட்டணியின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாக ஒன்றிணைவை அறிவித்தனர்.

இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள், குறிப்பாக காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இனிவரும் காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து பலமாகச் செயற்படுவோம் என்று குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், தேசம் முழுவதிலும் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஒட்டுமொத்த நலன்களையும் உரிமைகளையும் கருத்திற்கொண்டே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் திட்டமிட்ட காணி அபகரிப்புகள் இன்றளவிலும் தீவிரமாக இடம்பெற்று வருவதாகச் சுட்டிக்காட்டினார். இதனால், தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் தற்போதைய சூழலில் ஒன்றிணைவது அவசியமானது என்றும், இந்த ஒற்றுமை எக்காரணம் கொண்டும் குலையாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, இந்தக் கூட்டணி என்பது வெறுமனே தேர்தல் காலங்களுக்காக ஒன்றுசேர்ந்த தற்காலிகக் கூட்டணி அல்ல எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நலனுக்காகவும் ஒன்றிணைந்துள்ள ஒரு தேசிய மேடை என்று பிரகடனப்படுத்தினார்.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தமது கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை தனித்தனியாக பேணுவதற்கும் முன்வைப்பதற்கும் சுதந்திரம் இருப்பதை ஏற்றுக்கொண்ட பிரதிநிதிகள், பொதுவான நலன்கள் காணப்படும் விடயங்களை அடையாளம் கண்டு, சாத்தியமான சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு பொறிமுறையாக இந்த தளம் அமையும் என தெரிவித்தனர்.

இதன்போது மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

புதிய அரசியலமைப்பு

அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக வழங்கிய உறுதிமொழியை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் ஒருமித்த கோரிக்கையொன்றை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டதுடன், புதிய அரசியலமைப்பு நீதியும், சமத்துவமும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வும் உறுதி செய்யப்படும் வகையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மாகாண சபைத் தேர்தல்கள்

மாகாண சபைத் தேர்தல்கள் ஒரு வருட காலத்திற்குள் நடத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், தொடர்ச்சியாக இடம்பெறும் தாமதங்கள் குறித்து பிரதிநிதிகள் கவலை வெளியிட்டனர்.

மேலும், ஜனநாயக பங்கேற்பையும் பிராந்திய பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்வதற்காக மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்துமாறு ஒருமித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அனைத்து சமூகங்களையும் பாதிக்கும் காணி பிரச்சினைகள்

நாட்டின் மூன்று சமூகங்களையும் பாதிக்கும் தீவிரமான காணி தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்தும் காணப்படுவதாக பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நீண்டகால பிரச்சினைகளுக்கு பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை முன்னெடுத்து, நியாயமான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

மேலும் இந்த பொதுத் தளத்தின் ஊடாக தொடர்ச்சியான உரையாடல்களை முன்னெடுப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதிநிதிகள் மீண்டும் தெரிவித்ததுடன், இந்த விடயங்களில் பொதுவான அணுகுமுறையொன்றை உருவாக்குவது நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி மற்றும் அனைத்து சமூகங்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கு பங்களிக்கும் என நம்பிக்கை வெளியிட்டனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button