அரசியல்இலங்கைதமிழீழம்தமிழ்

பிள்ளையான் ஒரு உத்தமரில்லை! பிரபு எம்.பி விளாசல்

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு உத்தமர் கிடையாது. பொய்களைக் கூறுவதில் அவர் கைதேர்ந்தவர் என மட்டக்களப்பு  பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகரின் பிரதான பாலங்களில் ஒன்றாக இருக்கின்ற மட்டக்களப்பு புது பாலத்தின் ஒரு பகுதி அண்மையில் திடீரென உடைந்தது. இதனால் குறித்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளது. குறித்த பாலத்தை தற்காலிகமாகப் புனரமைக்கும் பணிகள் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபை  ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பத்து நகரங்களை அழகுபடுத்துகின்ற, அபிவிருத்தி செய்கின்ற அந்த வேலைத்திட்டத்தின் ஊடாக இந்தப் பாலம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அண்மையிலே நாடாளுமன்றத்திலும், அமைச்சு மட்டத்திலும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அமைச்சரின் ஊடாக இராஜாங்க அமைச்சரின் ஊடாக இதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதிலே முதலாவதாக, அந்தத் தெரிவு செய்யப்பட்ட திட்டங்களிலே இந்தப் பாலத்தை நாங்கள் முன்னுரிமைப்படுத்தியிருக்கின்றோம். உடனடியாக இதன் வேலையை ஆரம்பிக்குமாறு அமைச்சர் பணித்திருக்கின்றார். ஆகவே, அதற்கான நிதிகளைப் போதுமான அளவுக்கு விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்தப் பாலம் வந்து எங்களது சுற்றுலாத்துறையை ஊக்கப்படுத்தும் விதமாகவும், கவர்வதற்கு ஏற்ற விதமாக இதனை அமைப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்திருந்தோம். அதனைத் துரிதமாக மேற்கொள்வதற்காகவும், அதேநேரம் இந்த வருடத்திற்குள் அதனை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

அதற்குள்ளே இந்த ஒரு அனர்த்தம் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதற்காக இந்தப் பாலத்தைத் தற்காலிகமாக அமைக்கின்றோம். நிரந்தரமாக இந்த வருடத்திற்குள் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பிள்ளையான் என அழைக்கப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஒரு உத்தமர் கிடையாது. அவர் தொடர்பாக மக்களே நன்கு அறிந்திருக்கிறார்கள். பொய்களைக் கூறுவது தொடர்பாக அவர்தான் இதிலே ஒரு கைதேர்ந்தவர். அண்மைய தினங்களிலே அவர் தொடர்பான ஒரு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒரு பேராசிரியரைக் கொலை செய்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் இப்போது நீதிமன்றத்திலே விசாரிக்கப்படுகின்றது. அதனோடு ஒத்ததாக இன்னும் பல குற்றச்செயல்கள், கொலைகளோடு சம்பந்தப்பட்டிருப்பதாக அது தொடர்பான விசாரணைகள் இப்போது முடுக்கிவிடப்பட்டிருக்கின்றது.

அண்மைய தினம் மட்டக்களப்பிலே அந்த விசாரணை ஒன்றிற்காக, கொலை செய்த குற்றத்திற்காக அவர் விசாரிக்கக் கொண்டுவரப்பட்டிருந்த இந்த நேரத்திலே, எங்களது அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் மீது அவர் ஒரு கேலிக்கையான, ஒரு வேடிக்கையாக அதனைப் பேசியிருந்தார். அவரது செயல்பாடுகள் எப்படிப்பட்டது என மக்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள். நாங்கள் சரியான முறையிலே எங்களது விசாரணைகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றோம்.

நேர்மையாகவும் நீதியாகவும் அந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே, நாங்கள் எந்த ஒரு பொய்க் குற்றச்சாட்டுகளோ அல்லது அரசியல் அழுத்தங்களோ அல்லது அரசியல் பழிவாங்கலோ நாங்கள் மேற்கொள்ளவில்லை. கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாகத்தான் நாங்கள் விசாரணைகளை மேற்கொள்கின்றோம். நீதித்துறையும், காவல்துறையும் நியாயமாகவும் நீதியாகவும் அந்த விசாரணைகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றது.

கடந்த காலங்களிலே உங்களுக்குத் தெரிந்திருக்கும், இந்த நாட்டிலே ஊழல் புரையோடிப்போய் இருந்தது. உங்களுக்குத் தெரியும், அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிலும் ஊழல்வாதிகளால்தான் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆகவே, நிச்சயமாக அந்த ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை நாங்கள் முன்னெடுத்துக்கொண்டு வருகின்றோம்.

எதிர்வருங்காலங்களில், எங்களது அரசாங்கத்தின் காலப்பகுதியிலே எந்தவொரு ஊழலும் இடம்பெற வாய்ப்பில்லை. அதேநேரம், சிறந்த ஒரு சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட, ஊழல் இல்லாத முறையிலே சிறப்பான ஒரு பாலத்தை நாங்கள் அமைப்போம். அது மாத்திரமல்ல, இப்போது இடம்பெறுகின்ற ஒவ்வொரு அபிவிருத்தியும் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையோடும் நாங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

நீங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எங்களது காலகட்டத்திலே இடம்பெறுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக எந்தவொரு குற்றச்சாட்டுகளும் முன்வைக்க முடியாது என்று எதிர்பார்க்கின்றோம். சரியான முறையிலே நாங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக்கொண்டு வருகின்றோம்.- என்றார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button