
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான யூரியா உர விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரச வழிகாட்டலின் கீழ் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கமநல அபிவிருத்தி திணைக்களங்கள் ஊடாக விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்பட்டு சிறுபோக நெற்செய்கை நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விநியோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கமநல அபிவிருத்தி திணைக்களப் பகுதிகளுக்கு கீழ் மொத்தமாக 786 மெட்ரிக் டன் யூரியா உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மாவட்டத்திற்கு தேவையான மேலதிக யூரியா உரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கமநல அபிவிருத்தி திணைக்களங்களின் ஊடாக கிளிநொச்சி அடுத்தடுத்த கட்டங்களாக சிறுபோக நெற் செய்கை யூரியா உர விநியோகம்
மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் உலகளாவிய ரீதியில் பல்வேறு பொருளாதார சவால்களை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக எரிபொருள் விநியோகம், கடல்சார் போக்குவரத்து, அசேதன உர உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கம் உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் பிரதிபலித்து வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலையிலும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் காணப்பட்டாலும் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் உற்பத்திப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் தேவையான உரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
தற்போது தனியார் விற்பனை நிலையங்களில் 50KG யூரியா மூட்டையின் விலை 18,000 ரூபாவைத் தாண்டியுள்ள நிலையிலும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தேசிய மக்கள் அரசாங்கம் மானிய அடிப்படையில் 10,200 ரூபா விலையில் உரத்தை வழங்கி வருகின்றது.
இது விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைப்பதோடு சிறுபோக செய்கையை ஊக்குவிக்கும் முக்கிய நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ள 786 மெட்ரிக் தொன் யூரியா உரத்தைத் தொடர்ந்து தேவைக்கேற்ப அடுத்தடுத்த கட்டங்களிலும் மேலதிக உர விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் உரத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் கமநல அபிவிருத்தி திணைக்களங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.





