உலகம்

கணிக்கப்பட்டதை விட எபோலா வைரஸ் அதிவேகமாக பரவக்கூடும் – உலக சுகாதார அமைப்பு

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் தொற்று, கணிக்கப்பட்டதை விடவும் அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

 

இந்தத் தொற்றின் காரணமாக அந்த நாட்டில் இதுவரை குறைந்தது 131 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி மருத்துவர் ஏன் அன்சியா பிபிசி ஊடகத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் தொற்று குறித்து விரிவான ஆய்வுகளை முன்னெடுக்கும்போது, இது ஏனைய பகுதிகளுக்கும் பரவியிருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

கொங்கோவில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 513க்கும் மேற்பட்டோருக்கு எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அதேவேளை, அண்டை நாடான உகண்டாவிலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்

 

எனினும், லண்டனை தளமாகக் கொண்ட ‘எம்.ஆர்.சி உலகளாவிய தொற்றுநோய் பகுப்பாய்வு மையம்’வெளியிட்டுள்ள கணிப்புகளின்படி, இந்தத் தொற்றின் பரவல் பெருமளவில் கண்டறியப்படாமல் விடுபட்டிருக்கலாம் என்றும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்திருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

கடந்த வாரம் இந்தத் தொற்றை ஒரு சர்வதேச அவசரநிலையாக அறிவித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ், “இந்தத் தொற்றின் அளவு மற்றும் பரவும் வேகம் குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 24ஆம் திகதி முதலாவது தொற்று கண்டறியப்படுவதற்கு பல வாரங்களுக்கு முன்பிருந்தே இப்பரவல் நீடித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

தற்போது பரவி வரும் எபோலா வைரஸ், ‘புந்திபுகியோ’ (Bundibugyo strain) எனப்படும் அரிய வகை பிரிவைச் சேர்ந்ததாகும். இதற்கு இதுவரை முறையான தடுப்பூசி எதுவும் கண்டறியப்படவில்லை.

 

எனினும், ஏனைய மருந்துப் பொருட்கள் மூலம் இதற்குப் பாதுகாப்பு வழங்க முடியுமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு ஆராய்ந்து வருகிறது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button