
டெல்லியிலிருந்து சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகருக்குப் புறப்பட்ட வானூர்தி ஒன்றின் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 6 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திரா காந்தி சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து ஜூரிச் நகரை நோக்கிப் புறப்படுவதற்காக, வானூர்தி ஓடுதளத்தில் (Runway) அதிவேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. இதன்போது, அதன் இயந்திரங்களில் ஒன்றில் திடீரெனத் தீப்பிடித்துள்ளது.
வானூர்தியின் இயந்திரப் பகுதியிலிருந்து கரும்புகையும், தீப்பிழம்புகளும் வெளியேறுவதைக் கண்ட விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாக எச்சரிக்கை விடுத்தனர். இதனால் வானூர்தி ஓடுதளத்திலேயே அவசரமாக நிறுத்தப்பட்டது.
விபத்து குறித்து அறிந்ததும், வானூர்தியின் அவசர கால வெளியேற்றப் பாதைகள் (Emergency Slides) உடனடியாகத் திறக்கப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
எனினும், அவசரமாக வெளியேறும் முயற்சியில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் புகை காரணமாக 6 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே இந்தத் தீ விபத்துக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் காரணமாக டெல்லி வானூர்தி நிலையத்தில் சில மணிநேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.





