இந்தியா

இன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026: ‘ஜனநாயக திருவிழா’- வரலாற்று ரீதியாக ஒரு பார்வை!

தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகெங்கிலும் தமிழர்கள் வசிக்கும் அனைத்து நாடுகளுமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 234 தொகுதிகளுக்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

 

வாக்குப்பதிவு காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இடம்பெறவுள்ளது.

இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அதிமுக (அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்), தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் நாம் தமிழர் (நாதக) என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

 

இந்தத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் இன்று தமது ஜனநாயகக் கடமையை ஆற்றவுள்ளனர்

தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் சுமார் 1.47 லட்சம் காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

நேற்றுமுன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை ஜிபிஎஸ் (GPS) பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் 75,064 வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் வரலாறு என்பது சமூக நீதி, திராவிட அரசியல் மற்றும் தனித்துவமான அடையாள அரசியல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நீண்ட நெடிய பயணமாகும்.

 

1. சுதந்திரத்திற்கு முந்தைய காலம் (மதராஸ் மாகாணம்)

 

நீதிக்கட்சி காலம் (1920-1937): 1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின்படி முதல் நேரடித் தேர்தல் 1920 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் நீதிக்கட்சி (Justice Party) வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதுவே இடஒதுக்கீடு மற்றும் சமூக சீர்திருத்தங்களுக்கான அடித்தளமாக அமைந்தது.

காங்கிரஸ் வருகை: 1937 ஆம் ஆண்டு இல் நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றது. சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரானார்.

 

2. சுதந்திரத்திற்குப் பின் (1952 – 1967)

 

சுதந்திர இந்தியாவின் முதலாவது சென்னை மாநில சட்டமன்ற தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ராஜாஜி (இந்திய தேசிய காங்கிரஸ்) மீண்டும் முதலமைச்சரானார்.

காமராஜர் காலம் (1954 – 1962): ராஜாஜியின் ‘குலக்கல்வித் திட்ட’ எதிர்ப்பு காரணமாக அவர் பதவி விலக, காமராஜர் முதலமைச்சரானார். இவரது ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் ‘கல்வி மற்றும் தொழில்துறை பொற்காலம்’ எனக் கருதப்படுகிறது. மதிய உணவுத் திட்டம் இவரது காலத்திலேயே அறிமுகமானது.

திராவிட அரசியலின் எழுச்சி (1967 – 1987)

 

இந்தி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக காங்கிரஸ் சரிவைச் சந்தித்தது. சி.என். அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் (1967) முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. இது திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

 

அண்ணாதுரையின் தலைமையிலான அரசு ‘மதராஸ்’ மாநிலத்தை ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்தது.

அதன்பின்னர், 1972 ஆம் ஆண்டு மு. கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்தது. இதன்போது, மு.கருணாநிதியுடன் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த எம்.ஜி.ராமசந்திரன் (எம்.ஜி.ஆர்) கைகோர்த்த ஆட்சி முன்னெடுக்கப்பட்டது.

 

இந்தநிலையில், திமுகவிலிருந்து பிரிந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) என்ற கட்சியைத் தொடங்கிய எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்), 1977 முதல் 1987 வரை தொடர்ந்து மூன்று முறை தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அசைக்க முடியாத தலைவராக விளங்கினார்.

இருமுனைப் போட்டி மற்றும் தற்போதைய நிலை (1989 – 2016)

 

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியல் மு. கருணாநிதி (திமுக) மற்றும் ஜெ. ஜெயலலிதா (அதிமுக) ஆகிய இரு பெரும் ஆளுமைகளைச் சுற்றி நகர்ந்தது.

 

1989 முதல் 2011 வரை ஆட்சி என்பது இவ்விரு கட்சிகளுக்கும் இடையே மாறி மாறி கைமாறியது.

மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம், 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் ஆட்சியமைத்ததுடன், 1991,2001,2011, 2016 ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றது.

 

5.அதிமுக ஆட்சி (2016 – 2021)

 

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, குறுகிய காலத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தார். பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து ஆட்சியை வழிநடத்தினார்.

 

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் மறைவிற்குப் பிறகு நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு தேர்தலில், மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

தற்போதைய சூழலில் பங்காளிக் கட்சிகளின் ஆதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகம் பலமாக உள்ளதென கூறப்பட்டாலும், மும்முனை சவாலை இந்த தேர்தலில் எதிர்கொள்கிறது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button