
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்புக்கு இணங்க, ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்தநாட்டின் உயர்மட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன், மாநாட்டுக்கு வருகைதந்துள்ள ஏனைய நாட்டுத் தலைவர்களுடனும், முக்கிய கலந்துரையாடல்களில் ஜனாதிபதி ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘AI Impact Summit 2026’ மாநாடு புதுடெல்லியில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை 19ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.
‘AI Impact Summit 2026’ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று மாலை புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச வானூர்தி நிலையத்தைச் சென்றடைந்தார்.
இந்திய மத்திய இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சௌதரி (Shri Raj Bhushan Choudhary) உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.





