
இலங்கையில் 1972 ஆம் ஆண்டின் பழைய வாடகைச் சட்டத்தை நீக்கிவிட்டு, புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வாடகைச் சட்டம், வீட்டு உரிமையாளர்களை விட வாடகை குடியிருப்பாளர்களுக்கு அதிகச் சாதகமாக இருப்பதாக நீண்டகாலமாகக் கருதப்பட்டது.
இது உரிமையாளர்கள் தங்கள் வீடுகளைத் தடையின்றி வாடகைக்கு விடுவதைத் தயங்கச் செய்தது.
இந்த நிலையில், உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ஆகிய இரு தரப்பினரின் உரிமைகளையும் சமமாகப் பாதுகாப்பதே புதிய சட்டத்தின் நோக்கம் என அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் அவர் இன்று இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அண்மைக்கால விவாதங்களின்படி, புதிய சட்டமூலத்தில் உள்ள சில குறிப்பிடத்தக்க விதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாடகைதாரர் வாடகை செலுத்தத் தவறினாலும் அல்லது ஒப்பந்தத்தை மீறினாலும், முறையான நீதிமன்ற உத்தரவின்றி அவர்களை வெளியேற்ற முடியாது.
மின்சாரம், நீர் போன்ற அத்தியாவசிய சேவைகளைத் துண்டிப்பதன் மூலம் வாடகைதாரரை வெளியேற்ற முயற்சிப்பதைச் சட்டம் தடை செய்கிறது.
இதற்கிடையில், முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி உட்பட்டவர்கள் இந்தச் சட்டமூலம் குறித்து சில கரிசனைகளை வெளியிட்டுள்ளனர்.
வாடகை செலுத்தாதவர்களை உடனடியாக வெளியேற்ற முடியாமல் போனால், அது உரிமையாளர்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும்.
இந்தக் கடுமையான விதிகளால் மக்கள் தங்கள் வீடுகளை வாடகைக்கு விடப் பயப்படுவார்கள்.
அத்துடன், இது வாடகை வீடுகளுக்கான தட்டுப்பாட்டை உருவாக்கி வாடகையை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை இந்த சட்டமூலம் தொடர்பிலான கருத்துக்கணிப்பு காலத்தை பெப்ரவரி 3 முதல் மேலும் ஒரு மாதம் நீடித்துள்ளது.
எனவே, இந்தச் சட்டமூலம் தொடர்பாக ஏதேனும் ஆலோசனைகள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், பொதுமக்கள் அவற்றை எழுத்து மூலம் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கலாம் என்று நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.





