
விசேட அனுமதி தவிர்ந்து, ஏனைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரக்கறிகள் இறக்குமதி செய்யப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, வானூர்தி சேவை போன்ற சில நிறுவனங்களுக்கு குளிரூட்டப்பட்ட மரக்கறிகளை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதியை தவிர, வேறு எந்த தரப்பினருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது.
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க எமது செய்திச் சேவைக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்தார்.
முன்னதாக, டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களை அரசாங்கம் தங்களுக்கு சாதகமான பயன்படுத்தி, மரக்கறியை இறக்குமதி செய்வதாக தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பு குற்றம் சுமத்தியிருந்தது.
தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
நுவரெலியா, கண்டி, பண்டாரவளை, பதுளை மற்றும் மாத்தளை உள்ளிட்ட சில முக்கிய பிரதேசங்களில் போதுமான மரக்கறி செய்கை முன்னெடுக்கப்படுகிறது.
இருப்பினும், பண்டிகைக்காலத்தில் எதிர்பார்க்கப்படும் பற்றாக்குறையை காரணம் காட்டி, மரக்கறியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிப்பட்ட இலாபத்தை நோக்கமாகக்கொண்டு, மரக்கறியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தகம் அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த நடவடிக்கை தொடருமாயின், இறுதியில் உள்ளுர் மரக்கறி செய்கை வீழ்ச்சியடையும் என தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவை எமது செய்திச் சேவை தொடர்பு கொண்டு வினவியது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரக்கறிகள் இறக்குமதி செய்யவதற்கான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று குறிப்பிட்டார்.
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக நாட்டின் வடக்கு முதல் தெற்கு வரையான விவசாயம் காணிகள் பாதிக்கப்பட்டன.
இருப்பினும், வயல்கள் உள்ளிட்ட சில விவசாய காணிகள் மீண்டும் பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளக்கூடிய நிலையில் உள்ளன.
இதன்காரணமாக, குளிரூட்டப்பட்ட மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு அவசியமில்லை என்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.





