இலங்கை

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நத்தார் ஆராதனைகள்!

மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் பிறப்பை சிறப்பிக்கும் நத்தார் பண்டிகை இன்று (25) உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

இயேசு பிறப்பை அனுஷ்டிக்கும் வகையில் இலங்கை முழுவதும் உள்ள பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு விசேட ஆராதனைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் பிரதான நத்தார் வழிபாடுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றன.

புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளின் பங்குபற்றலுடன் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களுக்கான பேராயர் கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றதுடன் நத்தார் கீதங்களும் பாடப்பட்டன.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து விரைவாக மீட்சி பெறவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சியும் நிலவவும் விசேட பிரார்த்தனை ஆயரினால் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத் திருப்பலியை ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தையர்கள், ஆயர் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.

அத்துடன் கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பினை வழங்கியிருந்தனர்.

இதன்போது பெருமளவான புலனாய்வுத்துறையினரும் குறித்த பகுதியில் கடமைக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். விசேட அதிரடிப்படையினர் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.

இயேசு பிறப்பின் 2025ஆவது ஆண்டாக உள்ளதனால் பொப் ஆண்டகையினால் ஜுப்லி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button