
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைவிற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலகத் தீர்மானித்தால் அது பொறுத்தமானதொரு முடிவு அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாம் தற்போது இயற்கை பேரிடரினால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலேயே அவதானம் செலுத்தியுள்ளோம். பேரிடர்களிலிருந்து மக்களை மீட்கும் பணிக்கே எமது முன்னுரிமை. எமது அந்த கொள்கை ரீதியான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.
அதற்கமைய நாம் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக மக்களுக்காக இணைந்து செயற்படுவோம். இந்த சந்தர்ப்பத்தில் அதிகாரத்துக்கான செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைவுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவத்திலிருந்து விலகுவதாகக் கூறியிருக்கின்றாரா என்பது இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஆனால் அவர் ஒரு சிரேஷ்ட அரசியல் தலைவராவார். அனுபவமுள்ள தலைவர் என்ற ரீதியில் அவர் மீது எமக்கு சிறந்த மரியாதை காணப்படுகிறது. எனவே செயற்குழுவின் தீர்மானத்துடன் அவருடன் இணைந்து எமது பயணத்தைத் தொடர்வதற்கே நாம் விரும்புகின்றோம். அவரது அனுபவத்துடன் சஜித் பிரேமதாச உட்பட அனைவரும் இணைந்து முன்னோக்கிப் பயணிப்பதே அத்தியாவசியமானது.
எதிர்காலத்தில் நாம் ஆட்சியமைக்கும் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகள் இன்றியமையாதவையாகும். எமது கட்சியின் பெரும்பான்மையானோரின் நிலைப்பாடு இதுவேயாகும். எனவே அவர் எமது அரசியல் பயணத்தில் இணைந்தால் அது எமக்கு மேலும் பலமாகவே அமையும் என்றார்.





