
முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே முத்தையன்கட்டுகுளத்தின் நீர்மட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் ரேடியல் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் நயினாமடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்துவரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால்,
முத்தையன்கட்டுகுளத்தின் ரேடியல் கதவுகள் தொடர்ச்சியாக திறந்த நிலையில் வைக்கப்படும்.
இதன் காரணமாக, கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள், குறிப்பாக, மன்னாகன்டல் – வசந்தபுரம் பகுதிகளில் உள்ளவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதேபோன்று, பண்டாரவன்னி பகுதிகளில் வசிக்கும் மக்களும் கவனமாக இருக்க வேண்டும்.
வவுனியா வடக்கு பகுதிகளில் பெய்து வரும் மழையால் குறிவிச்சை ஆற்றில் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
நீர்மட்டம் உயர்வதை கவனித்தால், உடனடியாக கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளர் அவர்களுக்கு தகவல் வழங்கி,தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு தெரிவித்துள்ளதது.
இதேவேளை நாயாறு படகு சேவைக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.
எனினும், முகத்துவார பகுதியில் அதிக அலை அல்லது அதிக நீரோட்டம் ஏற்பட்டால்,படகு சேவையில் தாமதம் ஏற்படும் வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை, நீர்மட்டம், அலைகள் மற்றும் பாதுகாப்பு நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பாதுகாப்பான சூழ்நிலை உறுதி செய்யப்பட்டால் மட்டுமே படகு சேவை இயக்கப்படும்.
அவசரமாக செல்ல வேண்டியவர்கள் மற்றும் குறிப்பாக மோட்டார் சைக்கிள் பயன்படுத்துவோர் நெடுங்கேணி வழியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.





