
பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பல உண்மைகள் வெளிப்படும் என்ற அச்சத்தினாலேயே, அரசாங்கம் அதனைத் தவிர்க்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜ்பூர் ரஹுமான் குற்றம் சுமத்தியுள்ளார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவும், அதனை எதிர்கொள்ளவும் அரசாங்கத்துக்கு பலம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முற்றிலும் தவிர்ப்பதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், ஐக்கிய மக்கள் சக்தியும் அதற்கான உரிய பதில் நடவடிக்கைகளை எடுக்கும் முஜ்பூர் ரஹுமான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டதில் பல காரணிகள் உள்ளதாகவும், அவற்றை ஆராயாது, அரசாங்கம் தொடர்ந்தும் அதனைத் தவிர்த்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றுக்கு பொறுப்புக்கூற வேண்டிய பிரதியமைச்சர் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முடியும் என்பதைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முன்வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதத்தை அரசாங்கம் ஏன் தொடர்ச்சியாகத் தவிர்த்து வருகிறது என்ற விடயத்தைப் பொதுமக்கள் சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜ்பூர் ரஹுமான் வலியுறுத்தியுள்ளார்.





