இலங்கை

இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் நேற்று (6) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இந்தத் தெரிவு இடம்பெற்றது.

இலங்கைக்கான இத்தாலித் தூதுவர் டிமியானோ ஃப்ரங்கோவிக் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அத்துடன், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பணியாட்தொகுதியின் பிரதானியும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இங்கு உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையில் 1952 மே மாதம் முதல் காணப்படும் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளை நினைவுகூர்ந்தார்.

அரசியல், பொருளாதாரம், கலாசாரம் மற்றும் மக்களிடையேயான உறவு என பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட இந்த உறவு, தற்போது வலுப்பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கை – -இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதன் ஊடாக ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதற்கும், இரு சட்டமன்றங்களுக்கு இடையில் அர்த்தமுள்ள உறவை ஏற்படுத்துவதற்கும் இரு நாடுகளின் பொதுவான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கைக்கான இத்தாலித் தூதுவர் டிமியானோ ஃப்ரங்கோவிக் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்திற்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இவ்விடயத்தில் உறுப்பினர்கள் காண்பித்த உற்சாகத்தைப் பாராட்டினார்.

இத்தாலிய -தெற்காசிய பாராளுமன்றங்களுக்கு இடையிலான நட்புறவுச் சங்கத்தின் தலைவரின் வாழ்த்துச் செய்தியையும் இத்தாலித் தூதுவர் இங்கு தெரிவித்தார்.

இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்பு பல்வேறு துறைகளுக்கு விரிவடைகிறது என்றும், இவை அனைத்தும் இரு நாடுகளின் பரஸ்பர வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் புதிய ஒத்துழைப்பு இரு நாட்டுக்கும் இடையில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உறுதியான அடித்தளத்தை  வழங்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கை – இத்தாலி பாராளுமன் நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட  அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை- – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளில் அதன் நோக்கங்களை அடைய தீவிரமாக பங்கேற்க வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

சங்கத்தின் புதிய செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி குறிப்பிடுகையில், பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சபாநாயகர், இத்தாலித் தூதுவர் உட்பட சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான நட்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டையும்  அவர் தெரிவித்தார்.

இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டத்திற்கு முன்னர்  சபாநாயகருக்கும், இத்தாலித் தூதுவருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பில் வர்த்தகம், சுற்றுலா, கலாசாரம் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகள் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

செப்டம்பர் மாதம் இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக இத்தாலித் தூதுவர் குறிப்பிட்டதுடன், இந்த விஜயம் இரு தரப்புக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button