
தாயகத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் புதியதோர் மைல்கல்லாக அமையவுள்ள கொக்கிளாய் – புளியமுனை சூழலியல் சாகச சுற்றுலா மையம் (Eco Adventures ) சுற்றுலா மையத் திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ், சுற்றுலா அமைச்சு, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம், கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் கரைதுறைப்பற்று பிரதேச சபை மற்றும் வனவளத் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இச்சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் ஆரம்பகட்ட முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, கொக்கிளாய் – புளியமுனை பகுதியில் மாவட்டச் செயலாளர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் பரீட்சார்த்தப் பயணமொன்று இன்று (14.11.2026) மேற்கொள்ளப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலக உத்தியோகத்தர் நலன்புரிக் கூட்டுறவுச் சங்கத்தின் நிதி ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பரீட்சார்த்தப் பயணத்தில் மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இப்பயணத்தின் மூலம் குறித்த பிரதேசத்தின் இயற்கை அழகு, சூழலியல் சிறப்பம்சங்கள், சாகச சுற்றுலாவிற்கான வாய்ப்புகள் மற்றும் எதிர்கால சுற்றுலா அபிவிருத்திக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் நேரடியாக அவதானிக்கப்பட்டன.
இயற்கை வளங்களைப் பாதுகாத்தவாறு, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுடன், உள்ளூர் மக்களுக்கான புதிய தொழில்வாய்ப்புகள், சுயதொழில் முயற்சிகள் மற்றும் வருமான வாய்ப்புகளை உருவாக்குவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முதலாவது திட்டமிட்ட சூழலியல் சாகச சுற்றுலா மையமாக உருவாகவுள்ள கொக்கிளாய் – புளியமுனை Eco Adventures, எதிர்காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய சுற்றுலாத் தலமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இச்சுற்றுலா மையம் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை வழங்குவதுடன், பிரதேசத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கக்கூடிய முன்னோடித் திட்டமாக அமையும்.
இயற்கையைப் பாதுகாப்போம்! சுற்றுலாவை மேம்படுத்துவோம்! முல்லைத்தீவை வளப்படுத்துவோம்!
தகவல்:
ஊடகப் பிரிவு
மாவட்டச் செயலகம், முல்லைத்தீவு

#Mullaitivu #EcoTourism #EcoAdventure #KokkilaiPuliyamunai #MullaitivuTourism #TamileelamTourism #SustainableTourism #NatureConservation #AdventureTourism
#SwissTamilInfo #SwissTamil #ViduthalaiFM #சுவிஸ்தமிழர்தகவல்மையம் #விடுதலைFM





