சுவிஸில் நவம்பர் 29 அன்று முக்கியமான வாக்கெடுப்பு நடக்கிறது. 13வது மாத ஓய்வூதியத்துக்குப் பணம் திரட்ட, VAT (பொருட்கள் சேவைகள் மீதான வரி) உயர்த்தலாமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
13வது மாத ஓய்வூதியத்துக்கு மக்கள் 2024 மார்ச்சில் ஆம் என்று வாக்களித்தனர். இந்த டிசம்பர் தொடக்கத்தில் இருந்து அது முதல் முறையாக வழங்கப்படும். இதற்கு ஆண்டுக்கு 4 பில்லியன் பிராங்குக்கு மேல் செலவாகும். அந்தப் பணத்துக்காக, 2028 முதல் VAT வரியை 8.1 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக உயர்த்த நாடாளுமன்றம் முடிவு செய்தது. ஆனால் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான்.
உணவு, மருந்து, செய்தித்தாள், புத்தகம் போன்ற அன்றாடப் பொருட்களுக்கான குறைந்த வரி மாறாது. சுவிஸ் அரசும் மையவாத, இடதுசாரிக் கட்சிகளும் “ஆம்” என்கின்றன. இது சிறந்த வழி இல்லை, ஆனால் மற்ற வழிகள் எல்லாம் நிராகரிக்கப்பட்டுவிட்டன என்பது அவர்கள் வாதம். ஒரு குடும்பத்துக்கு மாதம் 7 முதல் 28 பிராங்க் வரைதான் கூடுதல் செலவு என்றும் சொல்கிறார்கள். வருமானத்துக்கு ஏற்ப இது மாறும்.
வலதுசாரிக் கட்சிகளான SVP (UDC), FDP (PLR) “இல்லை” என்கின்றன. விலைவாசி ஏறும் நேரத்தில் மக்களிடம் இன்னும் வரி கேட்கக் கூடாது என்பது அவர்கள் கருத்து. அரசுச் செலவைக் குறைக்க வேண்டும் என்கிறார்கள். உதாரணமாக, அடைக்கலம் கோருவோருக்கான செலவைக் குறைக்கலாம் என்கிறார்கள். ஓய்வூதிய முறையிலும் பெரிய மாற்றங்கள் வேண்டும் என்கிறார்கள்.
இது அரசியலமைப்புச் சட்ட மாற்றம். அதனால் மொத்த வாக்காளர்களில் பெரும்பான்மையும், மாநிலங்களில் பெரும்பான்மையும் ஆம் என்றால்தான் வரி உயரும்.
மூலம்: RSI
புகைப்படம்: Ronnie Schmutz / Unsplash





