சுவிஸின் தெற்கே உள்ள டிச்சினோ மாநிலத்தில் (Ticino) பல நகராட்சிகள் 2027-க்கான வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையைக் காட்டுகின்றன. இதைச் சமாளிக்க புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க மாநில அரசு விரும்புகிறது.
பெரிய நகரங்களின் கணக்கில் செலவு, வருமானத்தை விட அதிகம். மாநிலத்துக்குக் கட்ட வேண்டிய தொகை கூடிக்கொண்டே போகிறது என்று அவை சொல்கின்றன. சில இடங்களில் 100 பிராங்க் செலவில் 25 பிராங்க், மாநிலத்துக்கும் மத்திய அரசுக்குமே போய்விடுகிறது.
மாநில அரசின் உள்துறை பொறுப்பாளர் நோர்மன் கோபி (Norman Gobbi) இதை முழுமையாக ஏற்கவில்லை. சுமையை நகராட்சிகள் மேல் தள்ளுவதாகச் சொல்வது சரியில்லை என்கிறார். முதியோர் பராமரிப்பு, பொதுப் போக்குவரத்து செலவுகள் கூடியிருக்கின்றன. ஆனால் மாநிலமும் நகராட்சிகளும் செலவைப் பகிரும் விகிதம் மாறவில்லை. இனி சுமையை அப்படியே தள்ளிவிட மாட்டோம் என்றும் அரசு சொல்கிறது.
நிறுவனங்களின் இலாப வரி 2025 ஜனவரியில் குறைக்கப்பட்டது. இதனால் நகராட்சிகளுக்குப் பல மில்லியன் பிராங்க் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இது மக்கள் வாக்களித்து ஏற்றுக்கொண்ட மாற்றம் என்கிறார் கோபி. தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வெவ்வேறு வரி விகிதம் வைக்க நகராட்சிகளுக்கு உரிமை உண்டு. இதுவரை லுகானோ (Lugano), லோகார்னோ (Locarno) ஆகிய இரண்டு நகரங்கள் மட்டுமே அதைப் பயன்படுத்தியுள்ளன.
தீர்வாக “ஒத்துழைப்பு மாநாடு” என்ற புதிய அமைப்பை மாநில அரசு முன்வைக்கிறது. மாநிலமும் நகராட்சிகளும் ஒன்றாக உட்கார்ந்து, பிரச்சினையை ஆராய்ந்து, ஒன்றாகவே தீர்வு காண வேண்டும் என்பதே நோக்கம்.
மூலம்: RSI
புகைப்படம்: Aravind Sreekumar Nair / Unsplash





