பூனைகளுக்கு மைக்ரோசிப் (microchip) கட்டாயமாக்க வேண்டுமா என்பதில் சுவிஸ் மாநிலங்களுக்குள் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. உரி மாநிலம் (Uri) இந்த வாரம் அதற்கான சட்ட வரைவை மக்கள் கருத்துக்கு விட்டுள்ளது.
நாடு முழுவதும் இதைக் கட்டாயமாக்கும் யோசனையை, கடந்த மே மாதம் நாடாளுமன்றத்தின் கீழ்சபை நிராகரித்துவிட்டது. அதனால் இப்போது மாநிலங்கள் தங்கள் வழியில் முடிவெடுக்கின்றன. பேர்ன் (Bern) மாநில நாடாளுமன்றம் ஜூன் மாதம் ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியது. ஆர்காவ் (Aargau) 2024-லேயே ஒப்புதல் கொடுத்தது. சூரிக் (Zürich) வேண்டாம் என்று சொல்லிவிட்டது. பூனை வளர்ப்பவர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தால் போதும் என்பது அவர்கள் நிலைப்பாடு.
சுவிஸ்ஸில் ஆண்டுக்கு 10,000-க்கும் மேற்பட்ட பூனைகள் காணாமல் போனதாகப் புகார் வருகிறது. மைக்ரோசிப் இருந்தால் பூனையின் உரிமையாளர் யார் என்று உடனே தெரிந்துவிடும். உரி மாநில விலங்கு பாதுகாப்பு அமைப்பு இதை ஆதரிக்கிறது. அவர்கள் ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்கள். படுகாயத்துடன் கண்டெடுக்கப்பட்ட ஒரு பூனையை மருத்துவரிடம் கொண்டு போனார்கள். காப்பாற்ற முடியாமல் கருணைக்கொலை செய்யவேண்டி வந்தது. சில நாட்கள் கழித்து உரிமையாளர்கள் வந்து கோபப்பட்டார்கள். சிப் இல்லாததால் அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
சுவிஸ் கால்நடை மருத்துவர்கள் சங்கமும் கட்டாயமாக்குவதை ஆதரிக்கிறது. தெருவில் திரியும் பூனைகளைக் குறைக்கவும், நோய் பரவுவதைத் தடுக்கவும் இது உதவும் என்கிறார்கள். நாடு முழுவதும் நிறுத்தப்பட்ட நாய் வளர்ப்போருக்கான கட்டாயப் பயிற்சியை பல மாநிலங்கள் பின்னர் மீண்டும் கொண்டுவந்தன என்றும் நினைவுபடுத்துகிறார்கள். பூனைக்கும் அப்படியே நடக்கலாம் என்பது அவர்கள் கருத்து.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் பல கால்நடை மருத்துவர்களும் விலங்கு பாதுகாப்பு அமைப்புகளும் குறைந்த கட்டணத்தில் மைக்ரோசிப் போடும் முகாம்களை நடத்துகின்றன. இது சில நொடிகளில் முடியும். பூனைக்கு வலி கிட்டத்தட்ட தெரியாது.
மூலம்: RSI
புகைப்படம்: Ricardo Gomez Angel / Unsplash





