சுவிஸ் தலைநகர் பேர்ன் (Bern) நகரம் எலிகளைக் கொல்ல விஷத்துக்குப் பதிலாக பொறிகளைச் சோதித்து வருகிறது. இந்தச் சோதனை ஒரு வருடமாக நடக்கிறது.
எலி விஷம் எலிகளுக்கு கடும் வேதனை தருகிறது. சுற்றுச்சூழலுக்கும் கெடுதல். அதனால் நகர நிர்வாகம் கழிவுநீர்க் குழாய்களுக்குள் புதுவகைப் பொறிகளை வைத்திருக்கிறது.
பொறியில் ஒரு உணவுத் துண்டு இருக்கும். எலி உள்ளே போனதும் காற்றழுத்தத்தால் ஒரு கம்பி வேகமாக வெளியே வந்து அடிக்கும். எலி உடனே இறந்துவிடும். வேதனைப்படாது என்கிறார்கள். விஷம் இல்லாததால், செத்த எலியைச் சாப்பிடும் பறவைகள், நரிகள், முள்ளெலிகள் பாதிக்கப்படாது.
ஆனால் இதுவரை முடிவு சுமார்தான். ஒரு வருடத்தில் பொறி இரண்டு முறைதான் வேலை செய்தது. எலிகள் மிகவும் எச்சரிக்கையானவை. புதிய பொருளிடம் போகாது என்கிறார் நகரின் கழிவுநீர்ப் பிரிவுத் தலைவர் ராஃபேல் ஃப்ளூகிகர் (Raphael Flückiger). முடிவு சொல்ல இன்னும் நேரம் வேண்டும் என்கிறார்.
விலங்கு நல அமைப்பான “Tier im Fokus” உறுப்பினரும் நகர சபை உறுப்பினருமான டோபியாஸ் செனௌசர் (Tobias Sennhauser) இதை ஏற்கவில்லை. விலங்குகளைக் கொல்வதே தவறு என்கிறார். முதலில் வன்முறை இல்லாத எல்லா வழிகளையும் முயற்சி செய்ய வேண்டும் என்கிறார். சாப்பாட்டு மிச்சத்தை வெளியே போடுவதும், டாய்லெட்டில் கொட்டுவதும் எலிகளுக்கு வசதியாகிவிடுகிறது. மக்கள் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்பது அவர் கருத்து.
நகர நிர்வாகம் இது பற்றி துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து வருகிறது. ஆனால் அது மட்டும் போதாது, எலிகள் பரவாமல் இருக்க பொறிகளும் தேவை என்கிறது.
மூலம்: SRF
புகைப்படம்: Ricardo Gomez Angel / Unsplash





