சுவிஸ்ஸில் நவம்பர் 29 அன்று முக்கியமான வாக்கெடுப்பு நடக்கிறது. 13வது ஓய்வூதியத்துக்குப் பணம் திரட்ட, பொருட்கள் சேவைகள் மீதான வரியை (TVA) உயர்த்தலாமா என்று மக்கள் முடிவு செய்வார்கள்.
2024 மார்ச்சில், 13வது ஓய்வூதியம் வேண்டும் என்று மக்கள் வாக்களித்தார்கள். இது முதியோர் ஓய்வூதியக் காப்பீட்டு (AVS) நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. வரும் டிசம்பரில் கிட்டத்தட்ட 25 லட்சம் ஓய்வூதியர்கள் இதை முதல் முறையாகப் பெறுவார்கள். ஆனால் இதற்கான பணம் எங்கிருந்து வரும் என்பதுதான் இப்போதைய கேள்வி.
நாடாளுமன்றம் TVA வரியை 0.4 புள்ளி உயர்த்த முடிவு செய்தது. உணவு, மருந்து, செய்தித்தாள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான குறைந்த வரி மாறாது. மக்கள் ஒப்புக்கொண்டாலும், புதிய வரி 2028 தொடக்கத்துக்கு முன் அமலுக்கு வராது. அதுவரை 2026, 2027 ஆண்டுகளில் கூடுதல் நிதி எதுவும் இருக்காது.
சமூக ஜனநாயகக் கட்சி (PS), பசுமைக் கட்சி (Verts), Centre கட்சி, தொழிற்சங்கங்கள் இதை ஆதரிக்கின்றன. உயர்வு சிறியது என்றும், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இது லாபம் என்றும் சொல்கிறார்கள்.
வலதுசாரி PLR கட்சி, SVP கட்சி, வணிக அமைப்புகள் எதிர்க்கின்றன. மருத்துவக் காப்பீட்டுக் கட்டணம், வீட்டு வாடகை எனச் செலவுகள் ஏற்கனவே கூடிவிட்டன என்கிறார்கள். இந்த வரி உயர்வு கூட 13வது ஓய்வூதியத்தின் முழுச் செலவையும் ஈடுகட்டாது என்றும் சொல்கிறார்கள்.
முதல் கருத்துக் கணிப்புகளின்படி, 10 பேரில் 6 பேர் இந்த வரி உயர்வை நிராகரிக்கும் நிலையில் உள்ளனர்.
மூலம்: Le Matin
புகைப்படம்: Thiago de Andrade / Unsplash





