இந்தியா

உத்தராகண்டில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லியிலும் நிலஅதிர்வு

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு (அக் 6) ரிக்டர் அளவில் 4.9 நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் காரணமாக தலைநகர் டெல்லி-என்சிஆர் உட்பட வடஇந்தியாவின் பல மாநிலங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை இரவு 10:22 மணி அளவில் ஏற்பட்டது. உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி பகுதியை மையமாகக் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியே 13 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.

முன்னதாக இந்த நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவாகப் பதிவானதாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவித்த நிலையில், பின்னர் நில அதிர்வு மையத்தின் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இதன் அளவு 4.9 ஆக உறுதி செய்யப்பட்டது

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக டெல்லி, நொய்டா, குருகிராம், காசியாபாத் மற்றும் ஃபரிதாபாத் போன்ற டெல்லி-என்சிஆர் பகுதிகள் முழுவதும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. மேலும், உத்தராகண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல்வேறு இடங்களிலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

திடீரென ஏற்பட்ட இந்த நில அதிர்வால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு நிலவிய போதிலும், அதிர்வுகள் அடங்கிய பின்னர் சூழல் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாக உடனடியாக எந்தவொரு புகாரும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button