இலங்கை

காதல் விவகாரத்தில் மோதல்; இரு இளைஞர்கள் கத்திக்குத்திற்கு இலக்காகப் பலி

கொழும்பு 10, மாளிகாவத்த பகுதியில்  இரு இளைஞர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாளிகாவத்தை பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றுக்கு அருகில் நேற்றுமுன்தினம் இரவு சுமார் 10.30 மணியளவில் இரு தரப்பினருக்கு இடையே காதல் விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்து கத்திக்குத்துத் தாக்குதலாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 21 சேர்ந்த  முகமது அப்துல்லா மற்றும் முகமது ரெய்ஹான்  ஆகிய இரு இளைஞர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த 16 வயது சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் விசாரணைகளின்படி, மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியொருவருடன் இளைஞரொருவர் காதல் உறவில் இருந்துள்ளார்.

குறித்த யுவதி வேறு சில இளைஞர்களுடனும் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறு மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

குறித்த இளைஞர்கள் குழுவொன்று அவரது காதலர்களில் ஒருவரைத் தாக்கியதாகவும், இதன்போது தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் தனது பையில் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து எதிர்த்தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது மூவர் கத்திக்குத்துக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து ஏனையவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களில் ஒருவர், ஏற்பட்ட தகராறைத் தீர்த்து வைப்பதற்காகச் சென்றிருந்த நிலையில் சந்தேகநபரின் கத்திக்குத்துக்கு இலக்கானதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய யுவதியிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button