எம்மவர் நிகழ்வுகள்சுவிஸ்தமிழீழம்

சுவிசில் பிரமாண்டமாக நடைபெற்ற தமிழீழ விடுதலைப் பாடற்போட்டி – வாகைக்குயில் 2026

யேர்மனியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வாகைத்தமிழ் வானொலி, கடந்த 19.09.2026 சனிக்கிழமை அன்று சுவிற்சர்லாந்தில் மூன்றாவது தடவையாக “வாகைக்குயில் 2026” தமிழீழ விடுதலைப் பாடற்போட்டியை மிகப் பிரமாண்டமாக நடாத்தியிருந்தது.

காலை ஆரம்பமான இந்நிகழ்வு, இரவு நிறைவுக்கு வந்தது. பிரத்தியேகமாக அழைக்கப்பட்ட கலைஞர்கள் மற்றும் வானொலி அனுசரணையாளர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

தொடர்ந்து, மாவீரர் 2ம் லெப்டினன்ட் கமலினி கலையரசியின் சகோதரர் மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். லெப்டினன்ட் கேணல் தியாக தீபம் திலீபனுக்கான தியாகச்சுடரினை கப்டன் சூரியத்தேவனின் சகோதரி ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும் இடம்பெற்றது.

களமாடிக் காவியமான மாவீரர்கள், விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்த்த கலைஞர்கள் மற்றும் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகைதந்த சுபீட்ஷா நடனாலய மாணவிகளின் சிறப்பான வரவேற்பு நடனமும், ஆசிரியை திருமதி. மயூரிகா நேருயனின் வரவேற்புரையும் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து, “வாகைக்குயில் 2025” வெற்றிப்பாடலான “உயிர்க்கொடைக்காவியம் பாடல் 2” இறுவட்டு வெளியிடப்பட்டது. வளர்ந்து வரும் இசையமைப்பாளர் செல்வன் சந்தோஸ் அவர்கள் இறுவட்டினை வழங்க, தாயக இசையமைப்பாளர் திரு. முகிலரசன் அவர்கள் வெளியிட, JK கலையக நிறுவுநர் திரு. கங்காதரன் பெற்றுக்கொண்டார்.

இறுவட்டில் செல்வன் சந்தோஸ் இசையமைக்க, கவிஞர் ஈழப்பிரியன் கவியியற்ற, “வாகைக்குயில் 2025” வெற்றியாளர் செல்வி அமலியா சத்தியநாதன் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து சிறப்புப் பாடல்கள் இடம்பெற்றன. பின்னர் இசைக்கலைமணி IBC தங்கக்குரல் செல்வி மிருதுளா சிவா மற்றும் இசைக்கலைமணி இசைக்குயில் செல்வன் ஶ்ரீயன் சிவதாஸ் ஆகியோரின் முன்னிலையில் போட்டிகள் ஆரம்பமாகின.

போட்டிகள் பாலர் பிரிவு (கப்டன் குட்டிக்கண்ணன்), கீழ்ப்பிரிவு (லெப்டினன்ட் மாங்கனி), மத்தியப் பிரிவு (மேயர் மாதவன்), மேற்பிரிவு (கப்டன் வீரத்தேவன்), அதிமேற்பிரிவு (மேயர் சிட்டு), வளர்ந்தோர் (தேசக்குயில் சாந்தன்) மற்றும் இணை என ஏழு பிரிவுகளாக இடம்பெற்றன.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில், இம்முறை சிறுவர்களுக்கான உருவாக்கப்பட்ட முதலாவது “வளர்வாகைக்குயில் 2026” விருதை சுவிற்சர்லாந்தில் இருந்து பங்குபற்றிய செல்வி யதினா ஜெகன் பெற்றுக்கொண்டார். அதேவேளை, மூன்றாவது “வாகைக்குயில் 2026” விருதை யேர்மனியிலிருந்து வருகைதந்து போட்டியில் பங்குபற்றிய செல்வன் சுஜித் சத்தியகிரி பெற்றுக்கொண்டார்.

புலம்பெயர் தேசங்களில் தாயக உணர்வினையும், எங்களுக்காக உரிமைத் தேடலையும் விதைக்கும் வண்ணம் இளந்தலைமுறையினரிடையே முன்னெடுக்கப்படும் பாடல் போட்டிகள் பல இடபெற வேண்டும் என்பது பெற்றோர்களின் கருத்தாகவும் அமைந்திருந்தது.

250-க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட இப்பிரமாண்டமான
நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button