தமிழீழம்

மண்டைதீவு புதைகுழி அகழ்வு வழக்கு – நவம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

மண்டைதீவில் மனித புதைகுழிகள் காணப்படுவதாகவும் , அதனை அகழ்வதற்கு அனுமதி கோரி நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் பொலிஸார் சான்று ஆதாரங்களை சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசம் தேவை என கோரியதை அடுத்து வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது

 

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இகும் அதிகமான உடலங்கள்  மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள  கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன என சந்தேகிக்கப்படுகிறது.

அதனை அகழ்வதற்கு அனுமதி கோரி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் , நிலையில் , சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு , சான்றுகள் , ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்று யாழ்.மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தம்மால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் முடிவடையவில்லை என்றும் , விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

பொலிசாரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மன்று , வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button