இலங்கை

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சோதிலிங்க குருக்கள் சிவனடி சேர்ந்தார்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 54 வருடங்களாக இறைதொண்டாற்றி வந்த ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சோதிலிங்க குருக்கள் அவர்கள் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (11.09.2026) தனது 76ஆவது வயதில் காலமானார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலையை பிறப்பிடமாகவும், கருவப்பங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஸ்ரீ சோதிலிங்க குருக்கள் அவர்கள், தமது வாழ்நாளின் பெரும் பகுதியை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இறைபணியாற்றுவதில் செலவிட்டவர்.

தென்தமிழீழத்தில் இந்துக் குருமார்களிடையே நன்மதிப்பைப் பெற்றிருந்த இவர், வீரசைவ மரபின் வழித்தோன்றலாக விளங்கியதுடன், மட்டக்களப்பில் வீரசைவ மரபு நிலைத்து நிற்பதற்கும் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார்.

படுவான் பிரதேச மக்களின் நம்பிக்கைக்குரிய குருவாகவும் நீண்டகாலம் விளங்கிய சிவஸ்ரீ சோதிலிங்க குருக்கள் அவர்கள், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துடன் ஆழமான ஆன்மிகத் தொடர்பைக் கொண்டிருந்தார்.

தமது வாழ்நாளின் இறுதிவரை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இறைதொண்டாற்றிய அவரது மறைவு, ஆலய அடியார்கள், படுவான் பிரதேச மக்கள், சைவ சமயத்தினர் மற்றும் அவரை அறிந்த அனைவருக்கும் பெரும் இழப்பாக அமைந்துள்ளது.

பொதுமக்கள் அஞ்சலி

அமரத்துவமடைந்த சிவஸ்ரீ சோதிலிங்க குருக்கள் அவர்களின் பூவுடல், அவர் தமது வாழ்நாளில் அதிக காலத்தை கழித்த கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வெளிச்சூழலில் அமைந்துள்ள திருவாசக அரண்மனையில், இன்று (12.09.2026) காலை 11 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பூவுடல் அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, நாளை (13.09.2026) மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

சிவஸ்ரீ சோதிலிங்க குருக்கள் அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்த விரும்புவோர், குறிப்பிட்ட நேரத்திற்குள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவாசக அரண்மனைக்கு வருகை தந்து தமது இறுதி அஞ்சலியை செலுத்த முடியும்.

இதற்கான ஏற்பாடுகளை ஆலய பரிபாலன சபை முன்னெடுத்து வருகின்றது.

சிவஸ்ரீ சோதிலிங்க குருக்கள் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அடியார்களின் துயரிலும் பங்குகொள்கிறோம்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button