
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் சத்துருக்கொண்டான்இ பிள்ளையாரடி, கொக்குவில் மற்றும் பனிச்சையடி கிராமங்களை சேர்ந்த 186 பேர் கடந்த 09.09.1990 இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு கூறல் இன்றைய தினம் (09.09.2026) சத்துருக்கொண்டான் நினைவுத் தூபியில் இடம்பெற்றது.
35 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டும் மறுக்கப்பட்டும்வரும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் வற்றிப்போயுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து, குறித்த படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி வேண்டி இன்று நினைவு தினத்தை அனுஷ்டித்தனர்.

அத்துடன் குறித்த நினைவுநாளில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். குறித்த அறிக்கையில் கடந்த 09.09.1990 அன்று ஆண்டு மாலை 5.30 மணியளவில் சத்துருகொண்டான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டது. இச்சுற்றுவளைப்பில் சத்துருகொண்டான்இ பிள்ளையாரடி, கொக்குவில் மற்றும் பனிச்சையடி கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், வயது முதிந்தவர்கள், கற்பினித்தாய்மார்கள், கைக் குழந்தைகளுடன் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 187 பேர் சத்துருக்கொண்டான் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த போய்ஸ் டவுண் இலங்கை இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் 36 வருடங்கள் கடந்தும் இன்னும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் இவ்வாறு அழைத்து செல்லப்பட்டவர்கள் அனைவரும் உரிய இராணுவ முகாமில் வைத்து சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டதாக இச்சம்பவத்தில் உயிர் தப்பிப்பிழைத்தவர் எமது கிராம மக்களிடம் குறிப்பிட்டிருந்தார்.
இச் சத்துருகொண்டான் பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு கொடூரமான முறையில் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டவர்களில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பெரியவர்கள்,இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள் என 186 பேர் அடங்குவர். இவர்களில் 38 பேர் சத்துருகொண்டானையும், 39 பேர் பனிச்சையடியையும், 62 பேர் பிள்ளையாரடியையும், 47 பேர் கொக்குவில் கிராமங்களையும் சேர்ந்தவர்களாவர்.
குறிப்பாக இலங்கையில் அன்றைய காலகட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ரணசிங்க பிரேமதாச இலங்கை ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஈழத் தமிழர்களின் தாயகப் பிரதேசங்களான இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் பாரிய கூட்டுப்படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவை 1997 இல் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிறுவினார்.
இந்த ஆணைக்குழு எமது கிராமத்தில் இடம்பெற்ற படுகொலை தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்ட போது சத்துருக்கொண்டான் போய்ஸ் டவுண் இலங்கை இராணுவ முகாமில் கடமை புரிந்த கெப்டன்.வர்ணகுலசூரிய, கெப்டன்.கேரத், கெப்டன்.விஜயநாயக்க ஆகிய இராணுவத்தினர் இந்த சத்துருக்கொண்டான் கூட்டுப்படுகொலைக்கு காரணமானவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
மேற்படி விசாரணைக்கு தலைமை தாங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி கே.பாலகிட்னர் அவர்கள் இப்படுகொலைக்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளைப் பொறுப்பேற்குமாறும் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை வலியுறுத்தினார். எனினும் அப்போதைய அரசாங்கம் இதற்கான ஆரோக்கியமான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதனை இன்றைய நாளில் ஞாபகப்படுத்தி பதிவு செய்ய விரும்புகின்றோம்.
எமது உறவுகள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நாம் இலங்கை தேசத்திற்குள்ளும் சர்வதேச ரீதியிலும் பல வாக்கு மூலங்களை வழங்கியும், ஜனநாயகப் போராட்டங்களை மேற்கொண்டும் இன்றுவரை நீதி கிடைக்கப் பெறாதவர்களாகவே கடந்த 36 வருட காலமாக நீதிக்காகப் போடி வருகின்றோம்.
குறிப்பாக இவ்வாறான இக் கூட்டுப்படுகொலைகளுக்கு முழுமையாக பொறுப்புக் கூற வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும் இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கின்ற போதும், எம் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை பொறுப்புடன் தெரிவிக்காமலும், பொறுப்புக் கூறாமலும் இலங்கை அரசாங்கமானது இருப்பதை இட்டு வேதனை அடைகின்றோம்.
சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு!
குறிப்பாக ஈழத் தமிழர்களின் தாயகப் பிரதேசங்களான இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் யுத்த காலப்பகுதிகளில் இது போன்ற பாரிய கூட்டுப்படுகொலைகள் இடம்பெற்று இன அழிப்பு மற்றும் இன சுத்திகரிப்புக்கள் இடம்பெற்றன என்பது தாங்கள் அறிவீர்கள்.
அந்த வகையில் கடந்த 09.09.1990 அன்று எமது சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில் மற்றும் பனிச்சையடி கிராமங்களை சேர்ந்த 186 எமது உறவுகள் கூட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆனால் நாங்கள் எமக்குரிய நீதிக்கான பல நடவடிக்கைகளை எடுத்தும் இன்றுவரை நீதி மறுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றோம்.
எனவே எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையும் நீதியும் இலங்கை அரசாங்த்தினால் பொறுப்புக் கூற முடியாத சூழ்நிலையில் சர்வதேச சமூகத்தின் ஊடான நடவடிக்கையின் பால் எமக்கான நீதியை வேண்டி நிற்கின்றோம்.
எனவே, சத்துருகொண்டான் பிரதேசத்தில் இலங்கை அரச படைகளால் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 36ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று, 35வது ஆண்டு நினைவேந்தலின்போது நாம் முன்வைத்த வேண்டுகைகளை நினைவுபடுத்தி அவற்றை மீள உறுதிப்படுத்திக்கொண்டு;, மீண்டும் நீதிக்காக தங்களிடம் கோரிக்கை வைக்கிறோம்.
01. சத்துருக்கொண்டான் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கிய கூட்டுப்படுகொலை நடந்த முன்னைய சத்துருக்கொண்டான் போய்ஸ் டவுண்( டீழலள வுறழn) இலங்கை இராணுவ முகாம் இருந்த பகுதி மனித புதை குழி அகழ்விற்கு உட்படுத்தப்படல் வேண்டும்.
02. இவ் அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நிபுணார்கள் முன்னிலையில் இடம்பெற வேண்டும்.
03. இப்படுகொலை வழக்கானது சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லப்படல் வேண்டும். எனத் தெரிவித்துள்ளனர்.





