தமிழீழம்

செட்டிக்குளத்தில் சிங்கள குடியேற்றங்களா ?சத்தியலிங்கம் எம்.பி கேள்வி

வவுனியா மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய கீழ் மல்வத்து ஓயா திட்டத்தின் கீழ் செட்டிகுளம் பகுதியில் புதிய குடியேற்றங்கள் உருவாக்கப்படவுள்ளதா? என பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதி அமைச்சரும் இணைத்தலைவருமான உபாலி சமரசிங்க தலைமையில் நேற்று  நடைபெற்றது.

இதன்போது, கீழ் மல்வத்து ஓயா திட்டத்திற்காக செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் 1,200 ஏக்கர் காணிகள் வனவளத் திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதுகுறித்து திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு விளக்கமளித்தார்.

அதன்படி, இந்தத் திட்டத்தின் காரணமாக செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பு நீருக்குள் செல்லும் எனவும், இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்றுக் காணிகளும் நட்டஈடும் வழங்கப்படும் எனவும் அதிகாரி தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம், 500 ஏக்கர் காணி மட்டுமே நீருக்குள் செல்லவுள்ளதாக கூறப்படும் நிலையில், எதற்காக 1,200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினார்.

மேலும், மீதமுள்ள காணிகளில் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களை அழைத்து வந்து புதிய குடியேற்றங்களை உருவாக்கப் போகிறீர்களா? என்றும்  வினவினார்.

இதற்கு பதிலளித்த திட்ட அதிகாரி, புதிய குடியேற்றங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை என தெரிவித்ததுடன், அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் வயல் காணிகள் வழங்கப்படவுள்ளதாக கூறினார்.

இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட சத்தியலிங்கம் எம்.பி., வவுனியா மாவட்டத்திலேயே ஏராளமான மக்கள் காணிகள் இல்லாமல் இருக்கும் நிலையில், இந்த மாவட்டத்தில் வசிக்காத அனுராதபுரம் மாவட்ட மக்களுக்கு எந்த அடிப்படையில் இங்கு காணிகள் வழங்கப்படுகின்றன? என கேள்வி எழுப்பினார்.

மேலும், புதிதாக ஏன் பிரச்சினைகளை உருவாக்குகின்றீர்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தான் எழுப்பும் கேள்விகள் இனவாத நோக்கத்திலானவை அல்ல என தெரிவித்த அவர், மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தனது மாவட்ட மக்களின் உரிமைகள் தொடர்பில் கேள்வி கேட்கும் முழு உரிமையும் தனக்கு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து, கீழ் மல்வத்து ஓயா திட்டம் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கு இதுவரை முழுமையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்றும், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்காவது இந்தத் திட்டம் தொடர்பான முழுமையான தகவல்கள் தெரியுமா? என்றும் அவர் கேள்விகளை முன்வைத்தார்.

அத்துடன், திட்டம் தொடர்பான குறைந்தபட்சம் ஒரு விடயத்தையாவது இதுவரை ஏன் தெளிவுபடுத்தவில்லை என்றும்,  ஏன் அனைத்தையும் இரகசியமாக செய்கின்றீர்கள்?  என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை அவர் முன்வைத்தார்.

எனினும், சத்தியலிங்கம் எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்கு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிரதி அமைச்சரோ அல்லது திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரியோ உடனடியாக உரிய பதிலை வழங்கவில்லை.

இதனால், இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் நீண்ட நேரம் தொடர்ந்தது.

இந்நிலையில், கீழ் மல்வத்து ஓயா திட்டம் தொடர்பாக முழுமையான தெளிவூட்டலை வழங்க தாம் தயாராக இருப்பதாக திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button