தமிழீழம்

தந்தை செல்வாவின் நினைவுத்தூபி விசமிகளால் இடித்தழிப்பு

யாழ். தெல்லிப்பளை வல்லை – அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை இனந்தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர்.

தந்தை செல்வா குடும்பத்தவரது பரம்பரை இடுகாட்டில் இருந்த தூபியின் மேல் பகுதியே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.

போரின் பின்னர் தெல்லிப்பளை பிரதேசம் விடுவிக்கப்பட்டபோது அங்கு போரின் முன்னர் இருந்த தூபியை ஒத்த தூபி ஒன்று 2012 ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டது.

இவ்வாறு புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த தந்தை செல்வாவின் தூபியே நேற்றுமுன்தினம் மாலை இனந்தெரியாதோரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அயலவர்களால் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தூபியின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க அலங்கார வடிவப் பொருள்களை அபகரிக்கும் நோக்கில் இந்தச் சூறையாடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபி உடைப்பைத் தாம் வன்மையாகக் கண்டிக்கின்றார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் சி்.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியைத் தற்போது விமர்சிப்பவர்கள் கூட பெரியவரின் செயலை விமர்சிப்பது கிடையாது.

அத்தகையவரின் தூபியை உடைக்கும் இந்த வன்மச் செயலை மேற்கொண்டமையைத் தமிழரசுக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. அரசியல் வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் அரசியலில் இயல்பானவை. இருந்தபோதும் ஒரு நினைவுத் தூபியை இடிக்கும் அளவுக்கு அது இட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத காரியம் என்பதோடு இந்தச் செயல் அனைவர் நெஞ்சிலும் மற்றுமோர் இடியாகவே அமைகின்றது.

எனவே, இது தொடர்பில் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம். இந்தச் செயலைப் புரிந்த விஷமிகளைக் கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.என்றார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button