
நேபாளத்தின் இமயமலை எல்லைப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம், முதற்கட்ட மதிப்பீடுகளின்படி ஒரு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மிகப்பெரிய பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவால் தூண்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பேரழிவுக்கு சற்று முன்னர் அந்தப் பகுதியில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்திற்கும், வெள்ளம் எல்லைப் பகுதியை அடைந்ததைக் காட்டும் பாதுகாப்பு கேமரா காட்சியில் பதிவான நேரத்திற்கும் இடையே சுமார் 7 நிமிடங்கள் இருந்ததாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட ஆரம்பகட்ட செயற்கைக்கோள் ஆய்வின்படி, நேபாள–சீனா ரசுவாகதி எல்லைக் கடவைக்கு சுமார் 20 கிலோமீட்டர் வடகிழக்கே, பனியும் பாறைகளும் கலந்த பெரும் தொகுதி ஒன்று ல்ஹெண்டே கோலா (Lhende Khola) ஆற்றில்விழுந்திருக்கலாம்.
இந்தப் பனிப்பாறை–பாறைச் சரிவு ஆற்றின் ஓட்டத்தைத் தடுத்து, இயற்கையான தடுப்புக்குப் பின்னால் பெருமளவு நீரும் குப்பைகளும் தேங்கியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பின்னர் அந்தத் தடுப்பு உடைந்தபோது, நீர், சேறு, பாறைகள் மற்றும் வண்டல் ஆகியவை பெரும் வேகத்தில் ல்ஹெண்டே கோலா வழியாகவும், பின்னர் போதே கோசி (Bhote Koshi) ஆற்று அமைப்பிலும் பாய்ந்திருக்கலாம்.
இதன் விளைவாக உருவான மிகப்பெரிய நீர் மற்றும் குப்பைகளின் வெள்ளம், அதன் பாதையில் இருந்த குடியிருப்புகள், கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகளை அடித்துச் சென்றது.
எனினும், சம்பவங்கள் எந்த வரிசையில் நடைபெற்றன என்பது குறித்து இதுவரை உறுதியான முடிவு எட்டப்படவில்லை என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மலையப் பகுதியை நிலைகுலையச் செய்து, அதன் பின்னர் பனிப்பாறை–பாறைச் சரிவை ஏற்படுத்தியதா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதேவேளை, பனிப்பாறை ஏரியின் திடீர் உடைப்பு (glacial lake outburst) இந்தப் பேரிடருக்கு பங்களித்ததா என்பதும் ஆராயப்படுகிறது.
தற்போதைய தகவல்களின்படி, கனமழை இந்த வெள்ளத்திற்கான முக்கிய காரணமாகத் தெரியவில்லை. பேரிடர் ஏற்படுவதற்கு உடனடியாக முன்பு ரசுவா பகுதியில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு எதுவும் இல்லை என நேபாள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் திடீரென ஏற்பட்ட விதம், மேல்பகுதியில் ஆற்றின் ஓட்டத்தைத் தடுத்திருந்த தடுப்பு உடைந்து, அதற்குப் பின்னால் தேங்கியிருந்த நீர் மிக வேகமாக வெளியேறியதுடன் அதிகம் ஒத்துப்போகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
⚠️ ஆபத்து இன்னும் நீடிக்கலாம்
ல்ஹெண்டே கோலா ஆற்றின் மேல்பகுதியில் இன்னும் ஒரு தடுப்பு காணப்படுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் மீண்டும் திடீரென வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால், அந்தப் பகுதியில் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
காணாமல் போனவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்களும், 54 அமெரிக்கர்களும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் அடங்குகின்றனர்.
திபெத் எல்லையை ஒட்டியுள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை, இன்று (26) காலை போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட கடும் திடீர் வெள்ளம் அடித்து சென்றதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95-ஆக உயர்ந்துள்ளது.
இந்த திடீர் வெள்ளத்தால் வீதிகள், நீர்மின் திட்டங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள இராணுவம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 30-க்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.
டஜன் கணக்கான பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசு அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார்.
தொடர்புகொள்ள முடியாதவர்களில் ரசுவாவில் (Rasuwa) உள்ள நேபாள பொலிஸார் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 44 பேரும் அடங்குகின்றனர்.
இந்நிலையில் நேபாள பிரதமர் அலுவலகம் வௌியிட்டுள்ள தகவல்களின் படி,
44 இராணுவத்தினரும், 28 பொலிஸாரும், 13 ஆயுதமேந்திய பொலிஸாரும், மின்சாரத் திட்டங்களில் பணிபுரியும் 60 பேரும் காணாமல் போனவர்களில் உள்ளடங்குவதாக அறிவித்துள்ளது.
ஆரம்ப மதிப்பீடுகளின்படி, 98.33 மில்லியன் டொலர்களுக்கும் அதிக பெறுமதியான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுவரை 19 பாலங்கள் மற்றும் 40 கிலோமீற்றர் தூரமான வீதிகள் சேதமடைந்துள்ளதாக முதல்கட்ட மதீப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன





