
முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 20ஆம்ஆண்டு நினைவேந்தல் 14.08.2026இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தின் மீது இலங்கை விமானப்படையின் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 53 மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 100 இற்கும் அதிகமான மாணவிகள் காயமடைந்தனர். அவர்களில் பலர் அவயவங்களை இழந்தனர்
அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சி.குகநேசனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வானது, படுகொலை இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக சுடரேற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்களான சி.குகநேசன், இ.கிரிதரன், அ.சற்குணதாஸ், த.தர்மலவன், ஜீ.ராதிகா, சு.வளர்மதி, மு.கஜேந்தினி, முன்னாள் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ச.ஜீவராசா, சமூகசெயற்பாட்டாளர் த.யோகேஷ்வரன், பொதுகமக்கள் எனம் பலரும் பங்கேற்றிருந்தனர்
அதேவேளை இன்று (14) தாயக மற்றும் புலம்பெயர் உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்ப்பாட்டில் வள்ளிபுனம் பகுதியில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், பொதுச்சுடரைபொதுச்சுடரை இந்த படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்த செல்வம் நிறோஜினி தாயார் செல்வம் மேரிபுஸ்பலதா ஏற்றி வைத்தார். தொடர்ந்து உறவுகளால் தமது பிள்ளைகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, அகவணக்கம் நடைபெற்றது.





