
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, புதிதாக ஒரு எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , ஒரு எலும்புக்கூட்டு குவியலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 15 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மூன்று எலும்புக்கூட்டு குவியல்களும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் 437ஆவது எலும்புக்கூட்டின் வலது பக்க மூன்று விலா எலும்புடன் தொடுகையுற்றவாறு இரும்பு தகடு அடையாளம் காணப்பட்டதுடன், சில ஆணிகளும் சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 96 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 480 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு 479 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


அதேவேளை செம்மணி அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.





