இலங்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்: குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் புதிய கொடிக்கம்பம் அர்ச்சிப்பு!

 

யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு: புதிய கிரீட வடிவ கொடிக்கம்பம் அர்ச்சிப்புடன் திருவிழா நவநாள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம், குருநகர் புனித யாகப்பர் ஆலய வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, புதிதாக அமைக்கப்பட்ட கம்பீரமான கிரீட வடிவிலான கொடிக்கம்பத்தின் அர்ச்சிப்பு விழாவும், ஆலய ஆண்டுத் திருவிழா நவநாள் ஆரம்பமும் 16.07.2026 வியாழக்கிழமை மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயப் பங்குத்தந்தை அருட்பணி மனுவேல்பிள்ளை றெக்ஸ் சவுந்திரநாயகம் அடிகளாரின் சிறப்பான ஒழுங்குபடுத்தலில் இந்நிகழ்வுகள் அரங்கேறின.

திட்டத்தின் பின்னணியும் கூட்டு உழைப்பும்:

இவ்வுயரிய கொடிக்கம்பத் திட்டமானது, யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் ஆசீர்வாதத்துடன், முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி அருளானந்தம் ஜாவீஸ் அடிகளாரினால் அத்திவாரம் இடப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி மனுவேல்பிள்ளை றெக்ஸ் சவுந்திரநாயகம் அடிகளாரின் அயராத முயற்சியினாலும் வழிகாட்டலினாலும் இப்பணி தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

நிதிப் பங்களிப்பும் அர்ச்சிப்பு நிகழ்வும்:
இப்புனிதப் பணிக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை அமரர் கிரகோரி வெல்லம் அவர்களின் மகனும், லண்டனில் வசிப்பவருமான திரு. கிரகோரி கேர்பேட் வெல்லம் (தனம்) அவர்கள் வழங்கியிருந்தனர்.

குருநகர் பங்கின் மைந்தனும் பிரான்சில் பணியாற்றுபவருமான அருட்பணி கில்லறி வெல்லம் அடிகளாரின் முன்னிலையில், யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பத்திநாதன் ஜெபரெட்ணம் அடிகளாரினால் புதிய கொடிக்கம்பம் புனிதப்படுத்தப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டது. இதன்போது, நிதிப் பங்களிப்பை வழங்கிய தனம் குடும்பத்தினரும், அருட்பணி கில்லறி வெல்லம் அடிகளாரும் பங்குச் சமூகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி மிகக் கோலாகலமாகக் கௌரவிக்கப்பட்டனர்.

கொடியேற்றமும் நவநாள் திருப்பலியும்:
அர்ச்சிப்பு விழாவைத் தொடர்ந்து, புனித யாகப்பரின் திருவிழாக் கொடி ஆசீர்வதிக்கப்பட்டு, விசுவாசிகள் புடைசூழக் கொடியேற்றப்பட்டது. இத்துடன் ஆலயத்தின் திருவிழா நவநாள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசேட நவநாள் கூட்டுத் திருப்பலியை அருட்பணி கில்லறி வெல்லம் அடிகளார் தலைமையேற்று ஒப்புக்கொடுத்தார். இதன்போது, “அர்த்தமுடன் வழிபட்டு இறையாசீர் பெற்றிடுவோம்” என்ற உன்னத கருப்பொருளில் ஆன்மீக இறைசிந்தனை விசுவாசிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெருந்திரளான அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், குருநகர் பங்கின் இறைமக்கள் மற்றும் நாலாதிசைகளிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான விசுவாசிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வு யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய வரலாற்றில் என்றும் அழியாத ஒரு பொன்னெழுத்துப்பக்கமாய் இணைந்துள்ளது.

#JaffnaGurunanagar #StJamesChurch #JaffnaCatholics
#HolyFlagHoisting #HistoricMilestone #ViduthalaiFM #SwissTamilInfo #சுவிஸ்தமிழர்தகவல்மையம் #விடுதலைFM

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button